நீதித்துறை தனது வரம்பை மீறினால் அதுவும் ஒருவகை பயங்கரவாதமே: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரபரப்பு பேச்சு
புதுடெல்லி: நீதித்துறை தனது அதிகார வரம்பை மீறி செயல்படுவது ஒருவகை பயங்கரவாதமே என தலைமை நீதிபதி கவாய் எச்சரித்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஃப்.ஐ.ரெபெல்லோ எழுதிய ‘நமது உரிமைகள்; சட்டம், நீதி மற்றும் அரசியலமைப்பு குறித்த கட்டுரைகள்’ என்ற புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதித்துறையின் வரம்புகள் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இதேபோன்ற ஒரு கருத்தை அவர் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு யூனியனில் நடந்த நிகழ்ச்சியிலும் பதிவு செய்திருந்ததார்.
தற்போதைய விழாவில் அவர் பேசுகையில், ‘நீதித்துறையின் செயல்பாடுகள் அவசியமானவை தான். ஆனால், அது ஒருபோதும் நீதித்துறை சாகசமானதாகவோ அல்லது நீதித்துறை பயங்கரவாதமானதாகவோ மாறிவிடக் கூடாது. குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சட்டமன்றமோ அல்லது நிர்வாகத்துறையோ தவறும்போது மட்டுமே நீதித்துறை தலையிட வேண்டும். நீதித்துறை ஆய்வு என்பது மிகவும் நிதானத்துடன் கையாளப்பட வேண்டிய ஒன்று. மேலும், ஒடுக்கப்பட்ட சமூகங்களை உயர்த்துவதில் நீதித்துறைக்கு இந்திய அரசியலமைப்பு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது’ என்றார். அவரது இந்தக் கருத்து, ஜனநாயகத்தில் அதிகாரப் பகிர்வுக் கொள்கை மற்றும் நீதித்துறையின் எல்லைகள் குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.


