நீதிபதி மீது காலணி வீசிய விவகாரம் வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம்: அட்டர்னி ஜெனரல் அனுமதி
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் கடநத 6ம் தேதி காலை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு சில வழக்குகளை விசாரித்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர்(71), ஒருவர் தான் அணிந்திருந்த ஷூவை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வீச முயன்றார். அப்போது அங்கிருந்த காவலர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த வழக்கறிஞரை தடுத்து நிறுத்தி வௌியேற்றினர்.
வௌியே சென்ற அந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், “சனாதன தர்மத்தை அவமதிப்பதை நான் பொறுத்து கொள்ள மாட்டேன்” என கோஷமிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ராகேஷ் கிஷோரின் வழக்கறிஞருக்கான பார் கவுன்சில் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன் பேசிய ராகேஷ் கிஷோர், “கடவுள் சொல்லியே நான் இவ்வாறு செய்தேன். இதற்காக நான் வருந்தவும், மன்னிப்பு கேட்கவும் மாட்டேன்” என தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் எனவும், இதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் எனவும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் அசோசியேஷன் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கு நேற்று சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும்” என உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் அசோசியேஷன் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங் கோரினார்.
அதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணி அனுமதி வழங்கி உள்ளார்” என கூறினார். இதையடுத்து ராகேஷ் கிஷோர் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.