சென்னை: சென்னை 6வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மீது ரவுடி கருக்கா வினோத் காலணி வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2023 அக்டோபர் 25 ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகை முன்பு அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த கிண்டி போலீசார் ரவுடி கருக்கா வினோத் என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாதபடி 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யபப்ட்டது. விசாரணையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோத் கூறியிருந்தார். இது தொடர்பான வழக்கு நடந்து வந்த நிலையில், நேற்று பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து அவர் மற்றொரு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கருக்கா வினோத் அழைத்து வரப்பட்டார்.சென்னை தி நகரில் உள்ள டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு தொடர்பாக சென்னை 6-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பாண்டியராஜ் முன்பு விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது நீதிபதி பாண்டியராஜ் வழக்கு விசாரணையை தொடங்கினார். இதில், ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் எனக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை குறைத்து நீதிபதி உத்தரவிட வேண்டும் என்று கருக்கா வினோத் முழக்கமிட்டார். மேலும், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்திற்கு நேற்று 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், வழக்கை விசாரித்து கொண்டு இருந்த நீதிபதி மீது கருக்கா வினோத் காலணி வீச முயன்றுள்ளார். அருகில் இருந்த போலீசார் சுதாரித்துக் கொண்டதால் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இதுபோன்ற நபர்களை இனி காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
