ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு ‘நான்தான் தந்தை’ என ஒப்புதல் மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீசுக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை
சென்னை: ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு நான் தான் தந்தை என்று மாதம்பட்டி ரங்கராஜ் மாநில மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையில் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் சென்னை போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்துள்ளது. கோவையை சேர்ந்த பிரபல சமையல் கலைஞரான நடிகர் மாதம்பட்டி ராங்கராஜ், இவர் மீது சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.
அந்த புகாரில், மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, குழந்தை கொடுத்துவிட்டு ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார். அந்த புகாரின் மீது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் வனிதா விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு இடையே மாதம்பட்டி ரங்கராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடும்படி ஜாய் புகார் அளித்தார். அதன்படி மாநில மகளிர் ஆணையர் குமாரி விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணைக்கு இடையே 9 மாதம் நிறைமாத கர்ப்பமான ஜாய் கிரிசில்டாவுக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குமாரி நடத்திய விசாரணை தொடர்பான தகவல்கள் வெளியானது. அதில் ஜாய் கிரிசில்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது உண்மை என்றும், அவரது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் தான் தந்தை என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
அவர் ஒப்புக்கொண்டதால், ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு ‘டிஎன்ஏ’ பரிசோதனை தேவையில்லை என்றும், இருவரின் வழக்குகள் முடியும் வரை, குழந்தை பராமரிப்பு செலவுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் மறுக்க கூடாது என ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
அதேநேரம், ஜாய் கிரிசில்டாவை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மகளிர் ஆணையம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கான கடிதத்தையும் மாநில மகளிர் ஆணையம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை தொடர்பான முக்கிய தகவல்களை ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
