*கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர்
ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவசவுந்திரவல்லி, எம்எல்ஏ தேவராஜி ஆகியோர் வழங்கினர்.திருப்பத்தூர் ஒன்றியம், அச்சமங்கலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் சிவசவுந்திரவல்லி தலைமை தாங்கினார்.
திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ.சி.சுரேஷ்குமார், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, மாவட்ட பிரதிநிதி பிரபாகரன், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து, உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவசவுந்திரவல்லி, எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து, அச்சமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் சத்துணவு கூடம் அமைக்க துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.