Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜோலார்பேட்டை-சேலம் இடையே வந்தபோது பரபரப்பு ஏசி வேலை செய்யாததால் ரயிலை நிறுத்திய பயணிகள்

*தண்டவாளத்தில் இறங்கி போராடியவர்களிடம் சமரசம்

*வேறு பெட்டியில் இடம் ஒதுக்கி அனுப்பிய அதிகாரிகள்

சேலம் : சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் ஏசி வேலை செய்யாததால், ஜோலார்பேட்டை-சேலத்திற்கு இடையே ரயில் சென்றபோது அபாய சங்கிலியை இழுத்து நடுவழியில் பயணிகள் நிறுத்தினர். தண்டவாளத்தில் இறங்கி போராடிய பயணிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (12695), தினமும் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியே இயக்கப்பட்டு வருகிறது. இந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் பிற்பகல் 3.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது.

அந்த ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில், ஏசி சரியாக வேலை செய்யாமல் இருந்துள்ளது. அரக்கோணத்தை ரயில் கடந்தபோது, ஏசி ஒர்க் ஆகாதது பற்றி அப்பெட்டியில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள், டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், ஆன்லைன் மூலமும் ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் கூறியுள்ளனர்.

இதையடுத்து மாலை 6.28 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் வந்ததும், ஏசி மெக்கானிக் உள்ளிட்ட ஊழியர்கள் வந்து பார்த்துள்ளனர். இதனால், அங்கிருந்து ரயில் மாலை 6.51 மணிக்கு, அதாவது 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.

ஆனாலும், ஏசி சரியாகாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். ஜோலார்பேட்டை-சேலம் இடைப்பட்ட பகுதியில் வந்தபோது, திடீரென அந்த முதல் வகுப்பு ஏசி பெட்டியில் இருந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து நடுவழியில் ரயிலை நிறுத்தினர்.

பின்னர், அந்த பயணிகள் கீழே இறங்கி, அருகில் செல்லும் இணை தண்டவாளத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் அந்த ரயிலில் ரோந்து பணியில் இருந்த ஆர்பிஎப் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பெட்டியில் ஏசி ஒர்க் ஆகவில்லை, அதுதொடர்பாக ஆன்லைனில் தெரிவித்த புகாருக்கு சரி செய்துவிட்டோம், என பதில் மெசேஜ் வந்துள்ளது. ஆனால், ஏசி பிரச்னை சால்வ் ஆகவில்லை. அப்படி இருக்கும்போது, எப்படி சரி செய்து விட்டதாக பதில் கூறுவீர்கள் எனக்கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள், ரயில் சேலத்திற்கு சென்றதும், சரி செய்துவிடுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து 10 நிமிட தாமதத்திற்கு பின் அங்கிருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இரவு 8.12 மணிக்கு ரயில் வந்தது. உடனே ஏசி மெக்கானிக் உள்ளிட்ட ஊழியர்கள் ஏறி, சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், 10 நிமிடங்கள் கடந்தும் சரி செய்ய முடியவில்லை.

உடனே சேலம் கோட்ட இயக்கப்பிரிவு அதிகாரிகள் வந்து, பயணிகளிடம் சமரசம் பேசி, அருகில் உள்ள இரண்டடுக்கு ஏசி பெட்டிக்கு அவர்களை மாற்றி இருக்கை ஒதுக்கீடு செய்து, கோவை, பாலக்காடு வழியே திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். ரயிலில் ஏசி வேலை செய்யாததால், நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்ட சம்பவமும், ஆங்காங்கே அந்த ரயில் தாமதமாகியதும் பயணித்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.