ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகே ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் பைக்கில் வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை தூக்கிவீசிவிட்டு தப்பமுயன்றனர்.
இதை கண்காணித்த போலீசார் அவர்களை விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தாமலேரிமுத்தூர் ஊராட்சி மூலைவிட்டு வட்டம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்கிற கூல் (24), பூரான் வட்டம் பகுதியைச் சேர்ந்த தாமரைக்கனி (25) என்பதும் 30 கிராம் கஞ்சா பொட்டலங்களை வீசிவிட்டு தப்பமுயன்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் 2 பேரையும் கைது செய்து 30 கிராம் கஞ்சாவையும், அவர்கள் ஓட்டிவந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர். கைதான 2பேரையும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சாவை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்? யாருக்கு சப்ளை செய்ய முயன்றார்கள்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.