தொகுதி சீரமைப்பால் ஏற்படும் பாதிப்புக்கு எதிராக போராட தென் மாநில எம்பிக்கள் அடங்கிய கூட்டுக் குழு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: தொகுதி மறு சீரமைப்பால் தென் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதனால் போராட்டத்தை முன்னெடுக்க, தென் மாநில எம்.பி.க்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள், 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார். அதேநேரத்தில், மக்கள்தொகை உயர்வை கட்டுக்குள் வைக்காத உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போதுள்ள எம்பி தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தென்னிந்திய மாநிலங்களின் ஆதரவு இல்லாமல் வடமாநில எம்பிக்கள் ஆதரவுடன் தொடர்ந்து பாஜ ஆட்சியில் அமர்வதற்கான ஆபத்து ஏற்பட்டுள்ளதாக திமுக மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதியை குறைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை குறைத்தால் தமிழகத்தில் தற்போதுள்ள 39 எம்பி தொகுதி என்பது 31ஆக குறைந்துவிடும். தமிழக மக்கள் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப முடியாது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, மார்ச் 5ம் தேதி (நேற்று) சென்னை தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்’’ என்று அறிவித்தார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, சில கட்சிகள் மனு அளித்ததால் பரிசீலித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 66 கட்சிகள், இயக்கங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு அனுப்பி இருந்தது. இதில் அதிமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட 59 கட்சிகள் பங்கேற்றன. 7 கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க, காலை 9.30 மணி முதலே அரசியல் கட்சி தலைவர்கள் தலைமை செயலகம் வந்தனர். அவர்களை கூட்டம் நடைபெறும் நுழைவாயில் அருகே அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் நின்று வரவேற்று அழைத்து சென்றனர். அனைத்துக் கட்சி கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி, ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அந்த உரை பின்வருமாறு: ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு விவகாரத்தில் முடிவெடுப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம். கட்சி வேறுபாடுகளை கடந்து, அழைத்திருப்பது யார் என்று பார்க்காமல் எவ்வளவு முக்கியமான பிரச்சினைக்காக அழைத்திருக்கிறோம் என்று மனதில் வைத்துக் கொண்டு இங்கு வந்திருக்கக்கூடிய அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கம்.
* தமிழ்நாடு மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதை உணர்த்துவதற்காகத் தான், இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது.
* இன்றைக்கு தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதை குறைக்கின்ற அபாயம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசு 2026ம் ஆண்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யப்போகிறது. பொதுவாக, இதை மக்கள்தொகையை கணக்கிட்டுத்தான் செய்வார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் நம்முடைய தமிழ்நாடு வெற்றி பெற்றிருக்கிறது. பல பத்தாண்டுகளாக, வெற்றிகரமான குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகள் மூலமாக நாம் இதை சாதித்திருக்கிறோம்.
* தற்போது இருக்கின்ற 543 நாடாளுமன்ற தொகுதிகள் தொடர்ந்தால், மக்கள்தொகை குறைவாக இருப்பதால், நம்முடைய தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது இனி தமிழ்நாட்டுக்கு 39 எம்.பி.க்கள் கிடைக்க மாட்டார்கள்; 31 எம்.பி.க்கள் தான் இருப்பார்கள்.
* நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 848-ஆக உயர்த்தப்பட்டு, தற்போதைய விகிதாச்சாரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், நமக்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால், 10 தொகுதிகள்தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் நாம் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும்.
* இந்த இரண்டு முறைகளிலும், நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு, அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால், தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலையில்லை; நம்முடைய தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த கவலை. நம்முடைய தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் இந்த முக்கியமான பிரச்சினையில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை, உங்கள் அனைவரின் முன்பும் நான் வைக்கிறேன்.
* அனைத்துக்கட்சிகளும், கட்சி எல்லைகளை கடந்து குரல் கொடுக்க வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால், அது தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையை குறைந்துவிடும். எனவே, இந்த சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும்.
* மக்கள்தொகை அடிப்படையில், மக்களவை மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற பேரவைகளின் இடங்கள் குறையும் என்று சொல்வது, மக்கள்தொகை கட்டுப்பாடு எனும் கொள்கையை, முனைப்பாக செயல்படுத்தி, நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென்மாநிலங்களுக்கு தரப்படும் தண்டனையாகதான் அமையும். இதை முன்கூட்டியே உணர்ந்துதான், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் நாள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். தமிழ்நாட்டின் உரிமை, கூட்டாட்சி கருத்தியலோடு கோட்பாடு, தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட எதுவும் பாதிக்கப்படக்கூடாது என்பதை தீர்க்கமாக திடமாக அப்போதே நாம் வலியுறுத்தியிருக்கிறோம்.
* இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே அபாயமான செயல். இதில் நமக்குள் கருத்து மாறுபாடு நிச்சயமாக இருக்காது என்று நினைக்கிறேன்; இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும் தென் மாநிலங்களின் அரசியல் உரிமைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது, இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் அரசியல் பிரதிநிதித்துவ உரிமை மீதான நேரடி தாக்குதல்.
* இப்படியொரு சம நீதியற்ற அநீதியான தொகுதி மறுசீரமைப்பு செயல்படுத்தப்பட்டால், இந்திய அரசியலில் தமிழ்நாட்டின் குரல் நெரிக்கப்படும். தமிழ்நாட்டின் நலன் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலன் ஆகியவற்றை பாதுகாப்பதில் நம் மாநிலத்திற்கு இருக்கும் பலம் குறைக்கப்படும். 39 எம்.பி.க்கள் இருக்கும்போது எழுப்பும் குரலையே, ஒன்றிய அரசு ஏற்க மறுக்கும் நிலையில் இந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ, குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அழிக்க முடியாத அநீதியாக மாறும் என்பதை எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
* எனவே நம்முடைய நிலைப்பாட்டை, அழுத்தம் திருத்தமாக ஒரே சிந்தனையோடு எடுத்தாக வேண்டும். வர இருக்கும், இல்லை என்றால், எதிர்காலத்தில் நடைபெறும் இருக்கும் ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு’ அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை, நாம் கடுமையாக ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். எனவே, உறுதியான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி நான் அந்த தீர்மானங்களை முன்மொழிகிறேன்.
தீர்மானம் விவரம்
* இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய - மக்கள் தொகை அடிப்படையிலான ‘நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை’ இந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒருமனதாக கடுமையாக எதிர்க்கிறது.
* நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் - தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இந்த அனைத்துக்கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.
* தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதேசமயம் கடந்த 50 ஆண்டுகளாக சமூக - பொருளாதார நலத்திட்டங்களை சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக்கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.
* இந்த கோரிக்கைகளை தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கைகளாக அனைத்துக்கட்சி கூட்டம் முன்வைக்கிறது.
* இக்கோரிக்கைளையும், அவைசார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் - மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் - தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கை குழு’ ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இந்த கூட்டம் தீர்மானிக்கிறது. இந்த தீர்மானங்களின் மீதான உங்களின் கருத்தை, அனைத்துக்கட்சி தலைவர்களும் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் பேச அனுமதிக்கப்பட்டனர். இந்த கூட்டம் பிற்பகல் 2 மணி வரை நீடித்தது. கூட்டம், முடிவில் அனைத்துக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி பேசிய கருத்தின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக 58 கட்சி தலைவர்கள் பேசிய ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
* 30 ஆண்டுக்கு தொகுதி மறுவரையறை கூடாது
நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாக செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்ற தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000ம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* 7.18 சதவீதத்தில் மாற்றம் கூடாது
தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக்கூடாது என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டோர் பட்டியல் பின்வருமாறு:
சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகள்
அரசியல் கட்சி கலந்துகொண்ட தலைவர்கள்
திமுக ஆர்.எஸ்.பாரதி, வில்சன்
அதிமுக ஜெயக்குமார், இன்பதுரை
காங்கிரஸ் செல்வப்பெருந்தகை, ராஜேஷ் குமார்
பாமக அன்புமணி, வெங்கடேஸ்வரன்
விசிக திருமாவளவன், ரவிக்குமார்
மார்க்சிஸ்ட் சண்முகம், சச்சிதானந்தம்
இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், பெரியசாமி
மதிமுக வைகோ, செந்திலதிபன்
மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன்
தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன்
இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி காதர் மொகிதீன்
புரட்சி பாரதம் கட்சி ஜெகன்மூர்த்தி
சட்டமன்றத்தில் இடம்பெறாத கட்சிகள்
திராவிடர் கழகம் கி.வீரமணி, கலி.பூங்குன்றன்
தேமுதிக இளங்கோவன், பார்த்தசாரதி
மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன்அன்சாரி
இந்திய குடியரசு கட்சி செ.கு.தமிழரசன்
முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ்
கொங்கு இளைஞர் பேரவை தனியரசு
சமத்துவ மக்கள் கழகம் எர்ணாவூர் A.நாராயணன்
அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சி கதிரவன், கர்ணன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செந்தமிழன்
இந்திய ஜனநாயக கட்சி முத்தமிழ் செல்வன்
மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்
தமிழக வெற்றி கழகம் ஆனந்த்
அனைத்திந்திய மூவேந்தர் முன்னணி கழகம் பாண்டியன்
பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன்
மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஸ்ரீதர் வாண்டையார்
தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி பொன்குமார்
ஆம் ஆத்மி கட்சி வசீகரன்
அகில இந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி சி.என்.ராமமூர்த்தி
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன்
பகுஜன் சமாஜ் கட்சி ஆனந்தன், ஜெயசங்கர்
ஆதித்தமிழர் பேரவை அதியமான்
எஸ்.டி.பி.ஐ. நெல்லை முபாரக்
சமதா கட்சி மணிவண்ணன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) விடுதலை ஆசைத்தம்பி
தமிழ் புலிகள் கட்சி நாகை. திருவள்ளுவன்
பசும்பொன் தேசிய கழகம் ஜோதிமுத்துராமலிங்கம்
கலப்பை மக்கள் இயக்கம் செல்வகுமார்
ஏஐஎம்ஐஎம் வக்கில் அகமது
இந்திய தேசிய லீக் பஷீர் அகமது
ஆதித்தமிழர் கட்சி ஜக்கையன்
புதிய திராவிடர் கழகம் ராஜ்கவுண்டர்
மக்கள் விடுதலை கட்சி முருகவேல் ராஜன்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சரீப்
மண்ணின் மைந்தர்கள் கழகம் செல்வராஜ்
அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி ஜசக் அய்யா
அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழகம் முத்துராமன் சிங்கப் பெருமாள்
மதச்சார்பற்ற ஜனதா தளம் ராஜா என்கிற
எஸ்.பக்ருதின் அலி அகமது
தமிழ் தாயக மக்கள் முன்னேற்றக் கட்சி முகமது இலியாஸ்
தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சி சுரேஷ்பாபு
தமிழ்நாடு இளைஞர் கட்சி காமேஷ் நாராயணன்
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சக்திவேல்
தேசிய மக்கள் சக்தி கட்சி எம்.எல்.ரவி
தமிழர் தேசிய முன்னணி பழ.நெடுமாறன், ஆவல் கணேசன்
ராஷ்டிய லோக் தள் கட்சி காந்தி சங்கர்
அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் இசக்கி முத்து
காமராஜர் தேசிய காங்கிரஸ் முரளி
* கூட்டத்தில் பங்கேற்காத கட்சிகள்
புதிய தமிழகம், பாரதிய ஜனதா கட்சி , தமிழ் மாநில காங்கிரஸ் (மூ), நாம் தமிழர் கட்சி, புதிய நீதிக் கட்சி, டாக்டர் எம்.ஜி.ஆர். குடியரசு கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்.