மதுரை: நெல்லை மாவட்டம், கொங்கன்தான் பாறை கிராமத்தைச் சேர்ந்த நிவன்மேத்யூ, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்டம் வல்லம் கிராமத்தில் பூமணி என்பவர் பெயரில் இருந்த வீட்டினை ரூ.19 லட்சத்திற்கு கடந்த 2018ல் கிரையம் செய்தேன். தற்போது வீட்டின் மதிப்பு உயர்ந்துள்ள நிலையில், அந்த வீட்டை தங்களது பெயருக்கு மீண்டும் எழுதித்தருமாறு பூமணி மற்றும் கார்த்திக் ஆகியோர் மிரட்டுகின்றனர். நான் வீட்டில் இல்லாதபோது தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் அவரது கட்சியினர், கடந்த மே 27ல் வந்து வீட்டை காலி செய்யுமாறு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து நான் கொடுத்த புகார் நிலுவையில் உள்ளது. இதனிடையே தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த சிலர் வீட்டின் கேட்டில் இருந்த பூட்டை அகற்றிவிட்டு, அவர்கள் ஒரு பூட்டை பூட்டி சென்றுள்ளனர்.
இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது வீட்டை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு என் உயிருக்கு அச்சுறுத்தலில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மனுதாரர் புகாரின் மீது 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பி.புகழேந்தி, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.