Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெஸ்ட்டில் அதிக ரன் குவித்துள்ள டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார்: இங்கிலாந்து துணை கேப்டன் ஒல்லி போப் கணிப்பு

மான்செஸ்டர்: இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் 3வது நாளான நேற்று ஒல்லி போப் 71, ஹாரி புரூக் 3 ரன்னில் அவுட் ஆக ஜோரூட் 150 ரன் விளாசினார். டெஸ்ட்டில் இது அவருக்கு 38வது சதமாகும். பின்னர் வந்த ஜேமி ஸ்மித் 9, கிறிஸ் வோக்ஸ் 4 ரன்னில் அவுட் ஆகினர். 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 544 ரன் எடுத்திருந்தது. இன்னும் 3 விக்கெட் கைவசம் இருக்க 186 ரன் முன்னிலையுடன் வலுவான நிலையில் இருந்தது.

2 நாள் ஆட்டம் முழுமையாக இருப்பதால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஜோரூட் நேற்று 150 ரன் விளாசியதன் மூலம் டெஸ்ட்டில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் டிராவிட், காலிஸ், பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு முன்னேறினார். அவர் 13,409 ரன் அடித்துள்ளார். டெண்டுல்கர் 15,921 ரன்னுடன் முதல் இடத்தில் உள்ளார். ஜோ ரூட் இன்னும் 2,513 ரன் அடித்தால் டெண்டுல்கரின் சாதனையை தகர்க்கலாம். 35 வயதான ஜோ ரூட் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதுபற்றி நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் இங்கிலாந்து துணை கேப்டன் ஒல்லி போப் கூறியதாவது: ஜோரூட்டுக்கு மைல்கற்களை எட்டுவது பெரிது அல்ல, ஆனால் அது மிகவும் அருமையான ஒன்று என்று நான் நினைக்கிறேன். டெஸ்ட்டில் அதிக ரன் எடுத்த 2வது வீரர் என்பது நம்ப முடியாதது.

அவர் ரன் பசியில் இருக்கிறார். இதனால் டெண்டுல்கரை முந்தினாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன். அவர் கிரிக்கெட் விளையாடும் விதம், பயிற்சி எடுக்கும் விதம், அவர் எடுத்த ரன்களின் எண்ணிக்கை எல்லாம் அற்புதம். அவரின் பேட்டிங்கை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறார்” என்றார்.

ஜோ ரூட்... தனி ரூட்...

* ஜோ ரூட் டெஸ்ட்டில் 38வது சதம் அடித்தார். டெண்டுல்கர் 51, காலிஸ் 45, பாண்டிங் 41 சதம் அடித்து முதல் 3 இடத்தில் உள்ளனர்.

* டெஸ்ட்டில் மொத்தமாக ரூட் 104 முறை 50 பிளஸ் ரன் அடித்துள்ளார். இதன் மூலம் காலிசை (103) முந்தினார். டெண்டுல்கர் 119 முறை 50 பிளஸ் ரன்னுடன் டாப்பில் உள்ளார்.

* ரூட் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட்டில் 12 சதம் அடித்துள்ளார். இதன் மூலம் ஆஸி.யின் ஸ்மித்தை (11 சதம்) முந்தினார். பிராட்மேன் இங்கிலாந்துக்கு எதிராக 19, கவாஸ்கர் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 13 சதம் அடித்துள்ளனர்.

* ரூட் இந்தியாவுக்கு எதிராக அடித்துள்ள 12 சதத்தில் 9 இங்கிலாந்தில் அடித்தது. சொந்த மண்ணில் ஒரு அணிக்கு எதிராக எந்த ஒரு வீரரும் இவ்வளவு சதம் அடித்ததில்லை. பிராட் மேன் ஆஸி.யில் இங்கிலாந்துக்கு எதிராக 8 சதம் அடித்துள்ளார்.

* சொந்த மண்ணில் டெஸ்ட்டில் ரூட் 23 சதம் அடித்துள்ளார். ஆஸி.யில் பாண்டிங், தெ.ஆ.வில் காலிஸ், இலங்கையில் ஜெயவர்த்தனே இதேபோல் 23 சதம் அடித்துள்ளனர்.

* இங்கிலாந்தில் டெஸ்ட்டில் ரூட் 7,195 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸி.யில் பாண்டிங் 7,578, இந்தியாவில் டெண்டுல்கர் 7,216 ரன் எடுத்துள்ளனர்.

பும்ராவை குறை சொல்ல முடியாது

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்கல் கூறியதாவது: எங்கள் பந்துவீச்சு எங்களை ஏமாற்றியது. இதில் பவுலர்கள் தேர்வை குறைகூறுவது முக்கியமல்ல. அதிகமாக ரன்களை கசியவிட்டோம். பும்ராவைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்ல முடியாது, அவர் உலகின் நம்பர் ஒன் வீரர், திறமையானவர். சில நேரங்களில் உங்களுக்கு மறுமுனையில் இருந்து உதவி தேவைப்படும். ஆனால் அவை கிடைக்கவில்லை என்றார்.