Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பணியிடத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழக்கமும் பழக்கமும்!

10 இல் 6 பெண்கள் இன்று வேலைக்குச் செல்லத் துவங்கிவிட்டனர். சம்பளம், பதவி உயர்வு என எதிலும் சலைத்தவர்கள் இல்லை என நிரூபித்து வருகிறார்கள். ஆனாலும் வேலையில், பணியிடத்தில் ஆணுக்கு நிகராக பெண்கள் வேலையில் வெற்றிகரமாக செயல்பட இன்னும் தொழில்முறை பழக்கங்கள் (Professional Habits) சில கடைபிடித்தால் நமக்கான இடம் இன்னும் வலிமையாக மாறும். காலத்திற்கு வருகை - நேரத்திற்கு வருவது நம்பிக்கையையும், பொறுப்புணர்வையும் காட்டும்.தெளிவான தொடர்பு - உங்கள் கருத்துகளை தெளிவாகவும் தைரியமாகவும் பகிருங்கள். ஏதேனும் புரியவில்லை என்றால் கேட்பதில் தயங்க வேண்டாம்.குறிப்பெழுதல் பழக்கம் - முக்கியமான தகவல்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் நினைவாற்றலை மேம்படுத்தும்.தொழில்முறை உடை அணிதல் - பணியிடத்துக்கேற்ப சீருடை அல்லது நேர்த்தியான உடையை தேர்ந்தெடுங்கள். என் உடை என் உரிமை என்றாலும் எந்த இடத்திற்கு எப்படிப்பட்ட உடை என்பதும் அவசியம். நேரம் மேலாண்மை - உங்கள் வேலைகளை முன்னுரிமைப்படுத்தி திட்டமிட்டு முடிக்க பழகுங்கள். வீட்டில் வேலை நேரம் கிடையாது, வேலையில் வீட்டு சிந்தனை கிடையாது என்னும் பழக்கம் உண்டாக்கிக் கொள்ளுங்கள்.

பொதுநலனுக்கான பழக்கங்கள் (Ethical & Safety Habits)

அதிக தனிப்பட்ட விவரங்களை பகிராதீர்கள் - சக ஊழியர்கள் என்றாலும், உங்கள் தனிப்பட்ட விஷயங்களை பகிரும்போது கவனமாக இருங்கள்.திறமையை வளர்த்துக்கொள்வது - உங்களது அறிவையும், திறமையையும் தொடர்ந்து அபிவிருத்தி செய்யுங்கள். புதிய தொழில்நுட்பம் எனில் உங்களுக்கு ஜூனியர்களாக இருப்பினும் கேட்டு பயிற்சி பெற தயங்காதீர்கள்.

பணியிடத்தில் நாகரிகமாக நடந்துகொள்வது - சக ஊழியர்களுடன் மரியாதை மற்றும் நட்பு மனப்பான்மையுடன் இருங்கள். எவரையும் உறவு முறையில் அக்கா/அண்ணா, தங்கை/தம்பி என அழைக்காதீர்கள். மேடம்/ சார் முடிந்தவரை தவிர்த்து பெயர் சொல்லிப் பழகுங்கள். பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு - தனியாக இருக்கும்போது எப்போதும் எச்சரிக்கையுடன் இருங்கள். கடைசி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டுமெனில் பாதுகாப்பான முறையில் செல்லும் வழியை ஏற்பாடு செய்யுங்கள். முன்கூட்டியே உங்கள் வீட்டில் தெரியப் படுத்திவிடுங்கள்.முறையான புகார் முறையைப் பின்பற்றுங்கள் - ஏதேனும் தவறானதோ, தொந்தரவு கொடுப்பதோ உணர்ந்தால் நிறுவன மேலதிகாரி அல்லது ஹெச்.ஆர் பார்வைக்குக் கொண்டு சொல்லத் தயங்காதீர்கள்.

மனநலம் மற்றும் உடல்நலத்திற்கு உதவும் பழக்கங்கள்

மன அமைதியை பராமரிக்கவும் - வேலை அழுத்தத்தை சமாளிக்க தியானம், வாசிப்பு அல்லது இசை போன்றவற்றை உபயோகிக்கலாம்.உடலை கவனித்துக் கொள்ளுங்கள் - தினமும் சிரிப்பு, சிறு உடற்பயிற்சி, சிறந்த உணவுகள் ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்கவும்.ஓய்வு நேரத்தை மதிக்கவும் - வேலை மற்றும் தனியுரிமை நேரம் இடையே சமநிலையை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தோன்றும் தருவாயில் தனியாக, பாதுகாப்பாக பயணிக்கவும் தயங்காதீர்கள். பயணம் நிறைய நல்ல மனநிலை மாற்றங்களை கொண்டு வரும்.

மனநிலையிலும் கவனம் அவசியம்

தொழிலில் முன்னேறும் பெண்களுக்கு அறிவு, திறமை, நேர்மை ஆகியவை மட்டுமல்ல; மன உறுதியும் மிக அவசியம். இன்று பெண்கள் பன்முக வேலைகள் (multitasking) செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வேலை, குடும்பம், சமூகப் பொறுப்புகள் என பல வேடங்களில் தங்களைச் செம்மையாக்கிக் கொண்டு செயல்படுகிறார்கள். இதற்கிடையில் மாதவிடாய் சுழற்சி, மெனோபாஸ் என பல உடல் சார்ந்த மாற்றங்கள் என பல சவால்கள் உள்ளன. இந்த நிலையில் மன அழுத்தம் ஏற்படுவது இயற்கை. ஆனால் அதைச் சமாளிக்கவும், மனநலத்தைக் காப்பாற்றவும் சில எளிய பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வது தேவை.

“எனக்கான நேரம்”(Me Time) என்ற உணர்வை வளர்த்துக்கொள்

பணியில் பிசியாக இருக்கும்போது, பல பெண்கள் தங்களை தள்ளி வைக்கும் பழக்கத்தில் ஈடுபடுவார்கள். “நான் இவ்வளவு முக்கியமா?” எனத் தங்களுக்கான நேரத்தை தவிர்ப்பதுண்டு. ஆனால் உண்மை என்னவெனில், உங்கள் மன நலமே உங்கள் வளர்ச்சிக்கான வேர். உங்களை மதிக்கவும், விருப்பங்களை கவனிக்கவும் பழகுங்கள்.

மன அமைதிக்கான செயல்பாடுகள் அவசியம்

நீங்கள் விரும்பும் ஒரு கலை - எழுத்து, ஓவியம், பாட்டு, தையல், பயணம், சினிமா... எதுவாக இருந்தாலும் வாரத்தில் ஒரு சில மணி நேரங்கள் அதற்காக செலவிடுங்கள். இது உங்கள் மனதை சீர்படுத்தும். ஏன் விரும்பிய தோழர்கள், தோழிகளுடன் நேரம் செலவிட்டு பேசுவது கூட மன அமைதிக்கு வழி வகுக்கும்.

‘ஒத்துழைக்கும் மனம்’

வேலைப்பளு உங்களைத் தனிமையாக்கக்கூடும். ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரே மேசையில் உட்காரும் சக ஊழியரிடம் மனம்திறந்து பேசுங்கள். மனித உறவுகள் மன அழுத்தத்தை குறைக்கும் நல்ல மருந்து. பணியிடத்தில் யாருக்கும் அதிகம் நெருக்கம் ஆக வேண்டாம், யாரையும் அதிகம் தெரிந்து கொள்ளவும் வேண்டும் என்கிற நிலை உங்கள் சுயமரியாதையை கூட்டி பாஸ் லேடி உயரத்தில் வைக்கும்.

‘பரவாயில்லை’ என்பதில் மகிழ்ச்சி காணுங்கள்

பணிகளில் தவறுகள் நடக்கும். சில வேலைகளை முடிக்க நேரமில்லாமல் போவதும் சகஜம். அதற்காக ‘guilt’ உணர்வில் சிக்கி விட வேண்டாம். எல்லாவற்றையும் சரியாகச் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லையே. “பரவாயில்லை, அடுத்த முறையாவது நன்றாகச் செய்வேன்” என்ற எண்ணம் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்கும். தவறு எனில் நிறுவனத்தின் தலையீடு இல்லாமல் நீங்களே சரி செய்துவிடலாம் என மேற்கொண்டு சிக்கலில் சிக்காதீர்கள். அது வேலைக்கே ஆபத்தாக முடியும்.

சமூக வலைதளம் பொழுதுபோக்கு மட்டுமே

சமூக ஊடகங்களில் நம்மை ஒப்பிடும் எண்ணம் அதிகமாக இருக்கிறது. “அவள்/அவன் போல் வாழ வேண்டும்” என்ற உணர்வு மனதை நச்சுபோல பாதிக்கலாம். ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் - “No Social Media Day” கடைபிடிக்கப் பழகுங்கள். உங்கள் மனதில் உண்மையான அமைதி உண்டாகும். மேலும் சமூக வலைதளம் நம்மைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்பதைக் காட்டும் கண்ணாடி மட்டுமே. பக்கத்து வீடு தெரியும் ஜன்னலை எப்படி அளவாகப் பயன்படுத்துவோமோ அப்படிப் பாருங்கள்.

‘நான் சரியான பாதையில்தான் இருக்கிறேன்’

என உங்களை நம்புங்கள்மற்றவர்களின் விமர்சனம், எதிர்பார்ப்புகள், போன்றவை மனதை பாதிக்கலாம். ஆனால் நீங்கள் எடுத்துக்கொண்ட பாதை உங்கள் கனவுகளுக்கானது என்பதை தினமும் நினைவில் கொள்ளுங்கள். ஒரு நாள் உங்கள் முயற்சிகளுக்கான பயன் கிடைக்கும் என்பதை உறுதியாக நம்புங்கள்.

தியானம் மற்றும் சுவாச பயிற்சி

தினமும் 10 நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து சுவாசப் பயிற்சிகள் மேற்கொள்ளவும். இதில் கவனம் செலுத்துவதால் மனம் தெளிவாகும். நீங்கள் செய்த தவறுகள், எதிர்பார்ப்புகள், கோபங்கள் அனைத்தும் மெதுவாக நீங்கும். ஆழ்மன அமைதி உங்கள் திறனையும், வேலையில் வேகத்தையும் கூட்டும்.

- ஷாலினி நியூட்டன்.