Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேலையே வாழ்க்கையல்ல!

“என் வீட்டுக்காரர் எப்பவுமே ஆபீஸ் ஆபீஸ்னு அதையே கட்டிட்டு அழறாரு” எனும் புலம்பலைக் கேட்டதில்லையெனில் நீங்கள் நிஜமாகவே புண்ணியம் செய்தவர்கள். வீட்டுக்கு வீடு வாசப்படி போல இந்த புலம்பல்கள் எல்லா இடங்களிலும் காற்றைப் போல சர்வ சுதந்திரமாக அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. “ஆபீஸ் எனக்கு முதல் வீடு, வீடு எனக்கு இரண்டாவது ஆபீஸ்” எனும் கரகரப்பான குரல் மறு முனையிலிருந்து எழுகிறது. வீட்டில் தூங்கு வதைத் தவிர வேறெதையும் பெரிதாகச் செய்துவிடாத மக்கள் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு வாழ்க்கை என்பது அலுவலகத்தில் வேலை செய்வது, அதை அப்படியே வீட்டிலும் தொடர்வது. இப்படி ஒரு வாழ்க்கை தேவையா? என இவர்களிடம் கேட்டுப் பாருங்கள். “வாழ்க்கைல முன்னேறணும்ன்னா இப்படியெல்லாம் செய்தே ஆகணும்” என்பார்கள். சரி, வாழ்க்கை என்றால் என்ன என்று இன்னொரு கேள்வியையும் கேட்டுப் பாருங்கள்? முழிப்பார்கள். நமது வாழ்க்கை தனது அர்த்தத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறதோ எனும் கவலை எழுகிறது. ரிட்டையர்ட் ஆகும் வரை ஓயாமல் வேலை செய்து விட்டு, கடைசியில் திரும்பிப் பார்க்கும் போது நாம் அனுபவிக்காமல் தவற விட்ட தருணங்கள், வயது நம்மைப் பார்த்து நகைக்கும்.

வேலை முக்கியமானது, வாழ்க்கைக்குத் தேவையானது. ஆனால் அதுவே வாழ்க்கையல்ல எனும் தெளிவு நமக்கு அவசியம். வேலையின் வேலிகளைக் கடந்த ஒரு வாழ்க்கை வசந்தங்களோடும், மழலைப் புன்னகையோடும் நம்மைப் பார்த்து கையசைத்துக் கொண்டே இருக்கிறது. வாழ்வின் உன்னத நிமிடங்கள் இங்கே தான் உலவிக் கொண்டிருக்கின்றன. வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் “வொர்க்-லைஃப் பேலன்ஸ்” (Work-life balance) என்கிறார்கள். இந்த சமநிலை தடுமாறும் போதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் சிதைந்து போகின்றன. அல்லது வேலையின் முன்னேற்றம் முடங்கிப் போகிறது. “வேலை, ஆரோக்கியம், குடும்பம், நட்பு, உயிர் என ஐந்து பந்துகளை மேலே எறிந்து விளையாடும் விளையாட்டுதான் வாழ்க்கை. இதில் வேலை மட்டும் ரப்பர் பந்து போல் தரையில் விழுந்தாலும் துள்ளி வரும். மற்ற எல்லாமே கண்ணாடிப் பந்துகள். விழுந்தால் கீறல் விழலாம், உராய்வுகள் ஏற்படலாம், ஏன் உடைந்தே கூட போய்விடலாம். எப்போதுமே பழைய வசீகரத்துக்கு அவை திரும்ப முடியாது. எனவே வாழ்க்கைக்கும் வேலைக்குமிடையே சீரான ஒரு சமநிலை இருக்க வேண்டியது அவசியம்” என்கிறார் பிரைன் டைசன்.

வேலையையே கட்டிக் கொண்டு அழுபவர்கள் உடலைக் கவனிக்க மாட்டார்கள். மருத்துவரைப் பார்க்க வேண்டும். ஒரு செக்கப் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் போக மாட்டார்கள். காரணம் கேட்டால், “ரொம்ப வேலை, டைமே கிடைக்கலை” என்பார்கள். வேலைக்காக தங்களுடைய ஆரோக்கியத்தையே அடகு வைக்கும் இத்தகைய மனிதர்கள் ஒரு காலக்கட்டத்தில் நோயின் வீரியத்தால் வீழ்த்தப்பட்டு மருத்துவமனைக் கட்டிலில் அசையாமல் படுத்திருப்பார்கள். மறுபுறம் மனநலமும் அவர்களைப் புரட்டிப் போடும். எரிச்சலும், கோபமும் அவர்களுடைய இரு அகக் கண்களாக மாறும். வேலை முடித்து வீட்டுக்கு வரும்போது உடல் சோர்வில் சுற்றப்பட்ட கசங்கிய தலையணையாய் தெரியும். குடும்பத்தினர் சொல்வதை கவனிக்கவோ, அவர்களோடு உற்சாகமாய் நேரம் செலவிடவோ மனமிருக்காது. உளைச்சல், அழுத்தம் என இவர்களுடைய மனம் யானை புகுந்த வயல் போல சின்னாபின்னமாகிக் கிடக்கும்.

“வேலையை இழந்துவிடுவோமோ எனும் பயம் தான் பெரும்பாலான மக்கள் அதிக நேரம் வேலை செய்வதன் காரணம்” என்கிறார் உளவியலார் ராபர்ட் புரூக்ஸ். ஒரு வேளை உங்களுடைய வேலை உங்களுக்குத் தேவையான ஓய்வு நேரத்தைத் தராவிட்டால் சம்பளம் குறைந்ததானாலும் அடுத்த வேலையை நோக்கிப் போவதே நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள். புளூஸ்டெப்ஸ்.காம் எனும் இணையதளம் சமீபத்தில் ஒரு சர்வே நடத்தியது. ஊழியர்களின் வேலை-வாழ்க்கை சமநிலைக்காக நிறுவனங்கள் ஒரு துரும்பையும் கிள்ளிப் போடுவதில்லை என குற்றப்பத்திரிகை வாசித்தவர்கள் 82% பேர். இன்னொரு சர்வே 70% ஊழியர்களிடையே வேலை அழுத்தம் குறித்த கவலையும், தேவையான நேரத்தைக் குடும்பத்துடன் செலவிட முடியவில்லையே எனும் ஆதங்கமும் இருப்பதாய்ச் சொன்னது. மாறிவரும் வாழ்க்கைச் சூழல், உலகமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவையே இதன் காரணம் என பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்தனர். இந்த வேலை-வாழ்க்கைச் சமநிலைப் பிரச்னை ஒரு சர்வதேசப் பிரச்னையாக வேர் விட்டிருப்பதையே இத்தகைய ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன. வொர்க்-லைஃப் பேலன்ஸ் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

ஆனால் அதை எப்படி உருவாக்குவது என்பதில் தடுமாற்றங்கள் இருக்கும். இதற்கு மலையைப் புரட்டி வெளியே எறிய வேண்டிய தேவையெல்லாம் இல்லை. சின்னச் சின்ன சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டாலே போதுமானது. உதாரணமாக, வாரம் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து சீக்கிரமாகவே வீட்டுக்குக் கிளம்பி வருவது கூட குடும்ப உறவின் இடைவெளியை சீரமைக்க உதவும். வேலையை வேலைசெய்யும் இடத்திலேயே விட்டுவிட்டு வாருங்கள். அலுவலக நேரம் முடிந்த பின்னும் அதை முதுகிலும், மூளையிலும் தூக்கிச் சுமப்பது தவறு. ஒருவேளை வீட்டிலிருந்து செய்யும் வேலையெனில் இவ்வளவு மணி நேரம் தான் வேலை என தெளிவாய் வரையறுத்து அந்தக் கோட்டில் நில்லுங்கள். அடுத்த வாரத்துக்கான திட்டமிடுதல் பயனளிக்கும். ஆனால், அதில் தங்கள் ஆனந்தங்களுக்கான நேரம் இடம் பெற வேண்டியது அவசியம்.

நண்பரைப் பார்ப்பது, பூங்கா போவது, வீட்டிலேயே இருப்பது என எதுவானாலும் சரி, போடும் திட்டத்தில் நிலைத்திருங்கள். “இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறதே” என ஏதாவது வேலையை தலையில் இழுத்துப் போடாதீர்கள். “எவ்வளவு மணி நேரம் வேலை செய்தோம் என்பதை விட, இந்த மணி நேரத்தில் எவ்வளவு வேலை செய்தோம்” என்பதே திறமையை வெளிப்படுத்தும். சிலர் காலை முதல் மாலை வரை வேலை செய்வார்கள். இவர்களுடைய பெரும்பாலான நேரம் கிசு கிசுக்களிலோ, இணையத்தில், ஃபேஸ்புக் இன்ஸ்டா, போன்ற இடங்களிலோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ செலவிடப்படும். இந்த அனாவசிய நேரத்தையெல்லாம் விலக்கினால் அந்த நேரத்தை வேலை தாண்டிய வாழ்க்கைக்காகச் செலவிடலாமே.

அதே போல நிம்மதியாய் தூங்கவும் பழகுங்கள். தூக்கத்தை விட்டு வேலை செய்யத் தொடங்கினால் சீட்டுக் கட்டு போல வாழ்க்கை சரிந்து விடும். வாழ்க்கைக்கும், வேலைக்கும் இடையே அழுத்தமான கோடு கிழியுங்கள். வேலை நேரத்தில் ஆத்மார்த்தமாய் வேலை செய்வதும், மற்ற நேரத்தை மன மகிழ்ச்சியாய் செலவிடுவதும் அவசியம். அவ்வப்போது லீவு எடுத்து குடும்பத்துடன் சுற்றுலா போவது, நண்பர்களுடன் நேரத்தைக் செலவிடுவது என திட்டமிடுங்கள். “லீவ் எடுக்காவிட்டால் பணம் கிடைக்கும்” என லீவை எல்லாம் பணமாய் மாற்ற முயலாதீர்கள். பெயர், பணம், புகழ், பதவி எல்லாமே தற்காலிகமானவை. ஆழமான அன்பு, உற்சாகமான நட்பு, குடும்ப உறவு போன்றவையே வாழ்க்கையை அழகாக்குபவை. உங்க அலுவலகத்திலேயே சிலர் வேலை-வாழ்க்கை சமநிலையை வெகு சுலபமாகக் கடைப்பிடிப்பார்கள். அவர்களோடு நட்பு கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் மனநிலை உங்களை எப்போதுமே சட்டென எட்டிப் பிடித்துவிடும்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் வெள்ளிக்கிழமை மாலையில் அலுவலகத்தை விட்டு வெளியேறினால், மீண்டும் திங்கள்கிழமை காலையில் அலுவலகம் நுழையும் வரை வேலையே பார்க்க மாட்டார்கள். முழுக்க முழுக்க குடும்பத்துடன் செலவிடுவார்கள். அப்படி ஒரு கொள்கையை நீங்களும் கடைப்பிடியுங்கள். வார இறுதிகள் அடுத்த வாரத்துக்கான உற்சாக டானிக்கை உற்பத்தி செய்து தரும். வேலை செய்வது வாழ்க்கையை நிம்மதியாக வாழத்தான் தான். வேலையே அதற்கு வேட்டு வைத்து விடக் கூடாது. குடும்ப ஆனந்தங்களை மீட்டெடுக்கவும், சுவாரஸ்யமாய்க் கொண்டாடவும் மனதில் அது குறித்த சிந்தனைகளை பசுமையாய் வைத்திருங்கள். எதிர்பாராத நேரத்தில் உங்கள் கணவருக்கோ, மனைவிக்கோ கொடுக்கும் ஒரு சின்ன அன்புப் பரிசு கூட குடும்ப வாழ்வின் பிணைப்பை அதீத வலுவாக்கித் தரும். பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல, அதைத் தாண்டிய வாழ்க்கை உண்டு என்பதை மறக்காதீர்கள்.

- எஸ். ரமணி, சிதம்பரம்