வேலை மோசடி வழக்கில் 10 ஆண்டாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் 10 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத இன்ஸ்பெக்டர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர், கோபாலகிருஷ்ணன், கோபி உள்பட 6 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில்,‘ரயில்வே துறையில், வேலை வாங்கி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து நாங்கள் அளித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2015ல் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆனால், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்,’என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: வழக்கின் புலனாய்வு அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் கூட்டுச் சேர்ந்து, அவர்களை பாதுகாப்பதற்காக விசாரணையை முடிக்காமல் உள்ளனர். எனவே, இந்த வழக்கில் விசாரணையை முடிக்காமல், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் இருந்ததற்காக எப்.ஐ.ஆர் பதிவு செய்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 25 முதல் இன்று வரை திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பணியில் இருந்த, அனைத்து இன்ஸ்பெக்டர்களுக்கும் எதிராக டி.ஜி.பி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர்களுக்கு இழப்பீடாக தமிழக அரசு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். இந்த தொகை தொகையை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்ய வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை முடித்து 2 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்,’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.