Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலந்தாய்வில் பணி மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவரங்களை அனுப்பிவைக்க வேண்டும்: தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு

சென்னை: பணி நிரவல் கலந்தாய்வில் மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், பள்ளிக் கல்வித் துறையின் அரசாணைகள் ஆகியவற்றைப் பின்பற்றி 1.8.2024 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1.8.2024 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டதில், ஆசிரியர்களுடன் உபரி என கண்டறியப்பட்டவர்களுக்கு கடந்த ஜூலை 3ம் தேதி எமிஸ் இணையதளம் மூலமாக பணி நிரவல் மாறுதல் கலந்தாய்வு நடந்தது.

இந்த கலந்தாய்வில் பங்கேற்று நிரப்ப தகுந்த காலி பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவையுள்ள பணியிடங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்ட படிவங்களில் முழுமையாகப் பூர்த்தி செய்து தொடக்கக் கல்வி இயக்குநரகத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.