உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஜேஎம்எம் நிறுவனர் சிபு சோரன் காலமானார்: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி நேரில் அஞ்சலி
புதுடெல்லி: உடல் நலக் குறைவால் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த பழங்குடியின தலைவரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி நிறுவனருமான சிபு சோரன் நேற்று காலமானார். ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் (81), சிறுநீரகம் தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் 19ம் தேதி முதல் டெல்லியில் உள்ள கங்கா ராம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9 மணி அவர் காலமானார். இத்தகவலை சிபு சோரனின் மகனும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்தார். அதில், ‘‘திசோம் குருஜி நம் அனைவரையும் விட்டுச் சென்று விட்டார். நான் இன்று பூஜ்ஜியமாகி விட்டேன்’’ என ஹேமந்த் சோரன் பதிவிட்டார். இதையடுத்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மருத்துவமனைக்கு நேரில் சென்று, சிபு சோரன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மாநில ஆளுநர்கள், ஒன்றிய அமைச்சர்கள், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி, மேகாலயா முதல்வர் கான்ராட் கே.சங்மா மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி என கட்சி வேறுபாடின்றி பல்வேறு தலைவர்களும் சிபு சோரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
தேசிய அளவில் பழங்குடியின தலைவர்களின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சிபு சோரன். கடந்த 1944ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி, பீகார் மாநிலத்தோடு இருந்த ராம்கர் மாவட்டத்தின் நீம்ரா கிராமத்தில் (தற்போது இம்மாவட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ளது) சிபு சோரன் பிறந்தார். அவரது 15வது வயதில் அவரது தந்தை சோபரன் சோரன் கந்துவட்டிக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின், சிபு சோரன் 1973ல் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியை இடதுசாரி தொழிற்சங்க தலைவர் ஏ.கே.ராய் மற்றும் குர்மி மஹ்தோ தலைவர் பினோத் பிகாரி மஹ்தோவுடன் இணைந்து உருவாக்கினார்.
பழங்குடியின மக்களுக்காக தனி மாநிலம் கோரி உண்ணாவிரதம் உள்ளிட்ட பல போராட்டங்களை சிபு சோரன் நடத்தினார். அதன் விளைவாக 2000, நவம்பர் 15ம் தேதி பீகாரிலிருந்து பிரிந்து ஜார்க்கண்ட் தனி மாநிலம் உருவானது. சிபு சோரன் தும்கா மக்களவை தொகுதியில் இருந்து 8 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2 முறை மாநிலங்களவை எம்பியாக இருந்துள்ளார். தற்போது 2வது முறையாக மாநிலங்களவை எம்பியாக இருந்து வந்தார்.
இதுமட்டுமின்றி 3 முறை ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பதவி வகித்தவர். பலமில்லாத கூட்டணியால் 3 முறையும் சிறிது காலம் மட்டுமே முதல்வராக அவர் இருந்துள்ளார். கடந்த ஐமு கூட்டணி ஆட்சியில் ஒன்றிய நிலக்கரி துறை அமைச்சராகவும் சிபு சோரன் இருந்துள்ளார்.
* இன்று இறுதிச்சடங்கு
காலமான சிபு சோரனின் உடல் டெல்லியில் இருந்து நேற்று மாலை ராஞ்சிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று ராம்கர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்குகள் செய்யப்படும் என ஜேஎம்எம் கட்சி தெரிவித்துள்ளது.
* முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நிறுவனர், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மற்றும் விடுதலையடைந்த இந்தியாவின் மிகவும் செல்வாக்குமிக்க பழங்குடியின தலைவர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய சிபு சோரன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அவரின் வாழ்க்கையே சுரண்டலுக்கு எதிரான இடைவிடாத எதிர்ப்பு மற்றும் சமூகநீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலம் உருவாவதற்கான இயக்கத்தின் முக்கிய சிற்பிகளில் ஒருவராக, பழங்குடியின மக்களின் பல்லாண்டுகால உரிமை கோரலை ஒரு புதிய மாநிலத்தை தோற்றுவித்த அரசியல் சக்தியாக அவர் மாற்றினார். பெரும் தலைவரும் வாழ்நாள் போராளியுமான சிபு சோரனை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள ஹேமந்த் சோரன் மற்றும் ஜார்க்கண்ட் மாநில மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.