தள்ளுவண்டியில் தொடங்கி தென்னிந்தியா வரை விற்பனை புகழ் பெற்ற ஜிகர்தண்டாவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுமா?
*ஒன்றிய அரசின் பதிவகத்தில் விண்ணப்பம்
மதுரை : மதுரை ஜிகர்தண்டாவிற்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. விருந்தோம்பலுக்கு பெயர் போன ஊர் என்றால் மதுரைக்கு எப்போதும் முதல் இடம் உண்டு. ஏனெனில் உணவுப்பொருட்களின் தலைநகரம் என கூறுமளவுக்கு மதுரையின் உணவுப்பொருட்கள் அனைவரையும் கவர்ந்தவை.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மதுரை மல்லிகை என இந்த வரிசையில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு பொருளாக இருப்பது மதுரையின் ஜிகர்தண்டா எனும் குளிர்பானம் தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில், ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் கவர்ந்தது தான் ஜிகர்தண்டா. மதுரை ஜிகர்தண்டாவின் ருசியை உணராத பிரபலங்களே இருக்க முடியாது. அந்தளவிற்கு அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
மதுரை மல்லிகை, மதுரை மரிக்கொழுந்து, சுங்குடி சேலைகள் மற்றும் விளாச்சேரி களிமண் பொம்மைகள் ஏற்கனவே தங்களுக்கென தனித்துவ அடையாளமான புவிசார் குறியீட்டை பெற்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது மதுரை ஜிகர்தண்டாவிற்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் மதுரை பேமஸ் ஜிகர்தண்டா சங்கம் ஆகியவை இணைந்து மதுரை ஜிகர்தண்டாவிற்கு புவிசார் குறியீடு கேட்டு சென்னையிலுள்ள ஒன்றிய அரசின் புவிசார் குறியீட்டிற்கான பதிவகத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
பாதாம் பிசின், நன்னாரி சர்பத், சீனி மற்றும் ஐஸ் க்ரீம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஜிகர்தண்டாவிற்கு மதுரை மக்கள் மட்டுமின்றி, நாவில் ருசியை உணரக்கூடிய அனைவரின் அன்பையும் பெற்றது தான் இந்த ஜிகர்தண்டா. 10 முதல் 15 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் வைத்திருக்க முடியும். இந்த ஜிகர்தண்டா கோடையின் உக்கிரத்தில் இருந்து காப்பது மட்டுமின்றி உடலுக்கு தேவையான அதிகப்படியான கலோரியையும் கொண்டுள்ளது.
புவிசார் குறியீடு கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள அபிடவிட்டில், கடந்த 1970 காலகட்டத்தில் தள்ளுவண்டியில் வைத்து மதுரை நகரத்து தெருக்களில் விற்கப்பட்ட ஜிகர்தண்டா, நாளடைவில் மதுரை மக்களின் வரவேற்பை பெற்று தற்போது தென்னிந்தியா முழுவதும் 300 இடங்களில் விற்பனையாகும் அளவிற்கு வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக கீழமாரட்வீதி சந்திப்பில் உள்ள முதல் கடைக்கு இன்றளவும் நல்ல வரவேற்பு உள்ளது.
ஒரு முழுமையான ஜிகர்தண்டா உருவாவதற்கு குறைந்தது 3 நாள் ஆகும். பாதாம்பிசினை தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி தனியாக எடுக்க வேண்டும். நன்னாரி வேர், சீனி மற்றும் தண்ணீர் கலந்து விறகு அடுப்பின் மூலம் பதமாய் வரும் வரை தயாரிக்க வேண்டும். ஒரு லிட்டர் பாலை இளம்சூட்டில் 450 முதல் 400 மிலியாகும் வரை கொதிக்க வைத்து கொழுப்பு மற்றும் புரதங்கள் செறிவூட்டி தயாரிக்க வேண்டும். இதன்பிறகு பாலின் அடர்த்தி, கொழுப்பு மற்றும் தரத்தை இறுதி செய்ய மீண்டும் கொதிக்க வைத்து, 3ம் நாளில் இவை அனைத்தையும் சேர்த்து ஜிகர்தண்டாவாக முழு உருவம் பெறுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது. மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக உள்ள ஜிகர்தண்டாவிற்கும் புவிசார் குறியீடு கிடைக்கும்போது சர்வதேச அளவில் மதுரையின் புகழுக்கான வரிசையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.