ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்டில் 2 சரக்கு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் புருலியா நோக்கி நேற்று அதிகாலை சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. சண்டில் ரயில் நிலையம் அருகே சென்றபோது திடீரென சரக்கு ரயில் தடம் புரண்டது. அப்போது அதன் பெட்டிகள் சிதறி பக்கத்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன.
அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த மற்றொரு சரக்கு ரயில் தண்டவாளத்தில் கிடந்த பெட்டிகள் மீது மோதி அந்த சரக்கு ரயிலும் தடம் புரண்டது. இதனால் இரு ரயிலின் 20 பெட்டிகள் தண்டவாளம் முழுவதும் விழுந்து கிடந்தன. சிக்னல் கோளாறு காரணமாகவே 2வது சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்து காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில ரயில்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டன.