ராஞ்சி: ஜார்கண்டில் மாணவிகள் தங்கும் விடுதியையே விபசார மையமாகப் பயன்படுத்தி வந்த கும்பலின் செயல்பாடு போலீசாரின் திடீர் சோதனையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி, தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த ஆறு தங்கும் விடுதிகளில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது விபசாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்திற்குரிய நிலையில் இருந்த 26 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையைத் தொடர்ந்து, விடுதி மேலாளர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது ராஞ்சியில் இதே போன்ற மற்றொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ராஞ்சி நகரின் லால்பூர் பகுதியில் அமைந்துள்ள ‘மாணவிகள் தங்கும் விடுதி’-யில் விபசாரத் தொழில் நடைபெற்று வருவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீஸ் டிஎஸ்பி வெங்கடேஷ் ராமன் தலைமையிலான தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு, அந்த விடுதியில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின் போது, 10 இளம்பெண்கள் உட்பட 11 பேர் பிடிபட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், இந்த விடுதி நீண்டகாலமாகவே விபசார மையமாகச் செயல்பட்டு வந்ததும், இங்கிருந்து இளம்பெண்கள் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதற்காக பெரும் தொகை வசூலிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் விடுதி நிர்வாகத்தின் பங்கு குறித்தும், இதன் பின்னணியில் உள்ள முக்கியக் குற்றவாளிகள் மற்றும் வெளிநபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.