சென்னை: கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் பதிவான நகை திருட்டு வழக்கு தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, புகார் விசாரித்து முடித்து வைக்கப்பட்டு விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, புகாரை முடித்து வைப்பதாக இருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். புகார்தாரருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதை செய்ய தவறிய குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஆய்வாளர்களாக பணியாற்றிய 11 பேருக்கு எதிராக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதா என்பதை கண்காணிக்க தவறிய காவல் கண்காணிப்பாளர்களாக வகித்த பி.சரவணன், எம். அபினவ், எஸ்.சக்தி கணேசன், எஸ்.ஜெயக்குமார் மற்றும் எஸ்.பி ஆர்.ராஜாராம் ஆகிய 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து காவல் துறை அதிகாரிகள் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, அதிகாரிகள் தரப்பி விளக்கத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 5 எஸ்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். எஸ்பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்தனர்.


