வீடு முழுவதும் காலி நகைப்பெட்டிகள்: நகைக்கு ஆசைப்பட்டு திட்டமிட்டு அதிமுக பிரமுகர் மகளை கொன்ற கள்ளக்காதலன்
சேலம்: சேலத்தில் அதிமுக பிரமுகர் மகள் கொலையில் நகைக்கு ஆசைப்பட்டு திட்டமிட்டு கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வீடு முழுவதும் காலி நகைப்பெட்டிகள் கிடப்பதால் நகைகள் எங்கே? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதியில் உள்ள வீரராகவன் தெருவை சேர்ந்தவர் பாரதி (38). பி.டெக் இன்ஜினியர். இவரது தந்தை அதிமுக பிரமுகரான டெல்லி ஆறுமுகம். சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பாரதி, சேலம் சங்கர் நகரில் ரூ.25 ஆயிரம் மாத வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அங்கு டியூசன் சென்டர் நடத்தி வந்தார். சேலம் மல்லூர் நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் உதயசரண் (45). இவர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிஓஓவாக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் தொழிலதிபர்களுக்கான மீட்டிங்கில் கலந்து கொண்டபோது பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை பாரதிக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாகவும் உதயசரண் கூறினார். ஆனால் கொலை செய்யப்பட்டதாக அவரது தாய் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து அஸ்தம்பட்டி இன்டஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து, உதயசரணை பிடித்து விசாரித்தார். தொடக்கத்தில் மறுத்துவந்த உதயசரண், பிரேத பரிசோதனையில் கழுத்து எலும்பு உடைக்கப்பட்டிருக்கும் தகவலை வைத்து நடத்திய விசாரணையில் தலையணையால் நெரித்து கொன்றதாக போலீசாரிடம் கூறினார். இதையடுத்து உதயசரணை போலீசார் கைது செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நகைக்காக பாரதியை திட்டமிட்டு கொலை செய்துவிட்டதாக அவரது உறவினர்கள் போலீசாரிடம் குற்றம்சாட்டியுள்ளனர். அவரிடம் இருந்த 50 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ள அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தனர். இதையடுத்து பாரதி தங்கியிருந்த வீட்டில் நடத்திய சோதனையில் நகை வைப்பதற்கான 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் திறந்து காலியாகவே கிடந்தது. அவர் சிகரெட் புகைக்கும் அறையிலும் பொருட்கள் சிதறி கிடந்தது. இதனால் போலீசாருக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டது. தொடர் விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
பாரதியின் தாய் மற்றும் உறவினர்கள் 50 பவுன் நகையை திருடி விட்டதாக வாய்மொழியாக கூறினர். அதை வைத்து நடத்திய விசாரணையில் 2 மோதிரத்தை அடகு வைத்து ரூ.2 லட்சத்தை பாரதியிடம் கொடுத்ததாக உதயசரண் கூறினார். அங்கு கிடக்கும் நகை பெட்டியை வைத்து விசாரித்ததில் எதுவுமே தெரியாது என்றார். ஆரம்பத்தில் கொலை செய்யவில்லை என தெரிவித்த நிலையில், பாரதியின் 2 செல்போன் எங்கே? என விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான பேசினார். அதில் ஒரு செல்போனை சாக்கடையில் வீசியதாக தெரிவித்தார். இதன்பிறகு தான் அவர் மீது சந்தேகம் எழுந்தது. தொடர் விசாரணையில் அவர் கொலையை ஒப்பு கொண்டார். பின்னர் சாக்கடையில் வீசப்பட்ட செல்போனை மீட்டுள்ளோம். இன்னொரு செல்ேபானை எங்கே இருக்கிறது என விசாரணை நடந்து வருகிறது.
மேலும் தொழிலதிபர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில் தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேருக்கும் தந்ைத இல்லாததால் நருக்கம் அதிகரித்துள்ளது. சிவன் தொடர்பான பாடல்கள் இருவருக்கும் பிடித்துள்ளது மேலும் நெருக்கத்தை அதிகரித்தது. தொடக்கத்தில் நண்பர்களாக பழகியுள்ளனர். பின்னர் தவறான உறவுக்கு ஆளாகினர். அதற்கு பிறகுதான் உதயசரணின் பெயரை பாரதி அவரது கையில் உதயா என பச்சை குத்தும் அளவுக்கு நெருங்கினர். சிகரெட் புகைக்கும் பழக்கம் கொண்ட பாரதி, சம்பவத்தன்று மனைவியை விவாகரத்து செய்து விட்டு என்னை திருமணம் செய்து கொள் என கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் சிகரெட்டை பிடுங்கி கீழே போட்டுள்ளார். என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் உனது வீட்டிற்கு வருவேன் என கூறியதால் சண்டை அதிகமானது.
அப்போது பாரதி, உதயசரணின் கையை கடித்துள்ளார். அப்போது அடித்து கீழே தள்ளிய உதயசரண், தலையணையால் அமுக்கி கொலை செய்ததாக தெரிவித்தார். ரத்தம் இருக்கும் தலையணையை மீட்டுள்ளோம். இதில் சிக்கி கொள்வோம் என கருதி அவரது செல்போனை சாக்கடையில் வீசியுள்ளார். அதே நேரத்தில் நகைக்கான ஆதாரங்களை கொடுக்குமாறு கேட்டுள்ளோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். ஆனால் பாரதியை நகைக்காக திட்டமிட்டு கொன்றதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே பாரதி கொலைக்கான முக்கிய காரணம் என்ன? என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.


