சென்னை: வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ள ஜேஇஇ மெயின் தேர்வுக்கு நவ.27-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.இ, பி.டெக் சேர்க்கைக்கான ஜேஇஇ மெயின் தேர்வு தாள்-1-ம், பி.ஆர்க், பி.பிளானிங் சேர்க்கைக்கான ஜேஇஇ மெயின் தேர்வு தாள்-2ம் தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படுகின்றன.
இந்த நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல் என இரு முறை நடத்தப்படும். அந்த வகையில் 2026-27ம் கல்வி ஆண்டில் மேற்கண்ட படிப்புகளின் சேர்க்கைக்கான முதலாவது ஜேஇஇ மெயின் தேர்வு 2026ம் ஆண்டு ஜனவரி 21 முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள் www.nta.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி நவ.27ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் தேர்வு மையத்தின் விவரம் ஜனவரி முதல் வாரம் வெளியிடப்படும். இத்தேர்வின் முடிவுகளை பிப்.12ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெறும் 2வது ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதேநேரத்தில் ஐஐடி-யில் சேர வேண்டுமானால் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஜேஇஇ மெயின் தேர்வில் குறிப்பிட்ட தரவரிசைக்குள் இருப்பவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
