கட்சி மாறினாலும் மனம் மாறவில்லை; இப்போதும் ஜெயலலிதா படம் தவெக துண்டு போட மறுப்பு; செங்கோட்டையன் பா.ஜனதாவின் ஸ்லீப்பர் செல்லா? கூட்டணிக்கு இழுக்க அனுப்பப்பட்டாரா? நிர்வாகிகள் சந்தேகம்
கோவை: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒருங்கிணைக்க 10 நாட்கள் கெடு விதிக்கிறேன் என்ற செங்கோட்டையனின் கட்சி பதவிகளை, எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பறித்தார். மேலும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டன. பின்னர் ஹரித்துவார் செல்வதாக கூறி டெல்லி சென்ற செங்கோட்டையன், ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷாவையும், நிர்மலா சீதாராமனையும் சந்தித்தார்.
தொடர்ந்து, பசும்பொன்னில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இதையடுத்து செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அதிரடியாக எடப்பாடி நீக்கினார். பாஜவினர் உடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்த வந்த நிலையில், செங்கோட்டையன் திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் அவருக்கு தவெக உயர் மட்ட மாநில குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல அமைப்பு செயலாளர் ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.
புதிய கட்சியில் ஒரு பெரிய தலைவர் இணைந்தால், ஒரு பிரமாண்ட கூட்டத்தை கூட்டி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உடன் இணைவது வழக்கம். ஆனால் ஒரே தொகுதியில் அதிக முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற செங்கோட்டையன் வெறும் 25 பேருடன் தவெகவில் இணைந்துள்ளார். இது தனது செல்வாக்கை அவர் இழந்து விட்டாரா என்ற சந்தேகத்தை தவெக தொண்டர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. பாஜவுடன் நெருக்கமாக இருந்த செங்கோட்டையன் திடீரென தவெகவில் இணைந்து இருப்பதும், கட்சியில் இணைவதற்கு முன்பாக பாஜவின் தூதர் ஒருவர் அவரை சந்தித்து, நீண்ட நேரம் ஆலோசித்ததும் ஏதோ ஒரு அசைன்மெண்டுக்காக பாஜவின் ஸ்லீப்பர் செல்லாக செங்கோட்டையன் அனுப்பப்பட்டு இருக்கலாம் எனவும் தவெக நிர்வாகிகள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே ஆர்எஸ்எஸ்சில் பயிற்சி பெற்று பாஜவில் இருந்து அதிமுகவிற்கு சென்று அங்கிருந்து தவெகவிற்கு தாவிய நிர்மல்குமார், கரூர் வழக்கில் பயந்து டெல்லியில் பதுங்கி இருந்து பாஜ விஐபிக்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா, விஜய் வீட்டில் ஐ.டி. ரெய்டு நடத்திய ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட அருண்ராஜ் ஆகியோர் தவெகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நிலையில், செங்கோட்டையன் மூலம் தவெகவை முழுமையாக ஆர்எஸ்எஸ். கட்டுப்படுத்த முயல்வதாகவும் கூறி வருகின்றனர்.
தவெகவில் இணைந்ததும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா அணிவித்த துண்டை வாங்க மறுத்த செங்கோட்டையன் துண்டு அணிந்தால் எல்லோரும் கிண்டல் செய்வார்கள் என்று கூறினார். செங்கோட்டையனின் இந்த பேச்சு தவெகவினரிடையே கடும் அதிருப்தியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கட்சியில் இணைந்த பிறகு சம்மந்தப்பட்ட கட்சியின் துண்டை அணிந்தால் எல்லோரும் கிண்டல் செய்வார்கள் என்றால் உண்மையிலேயே இவர் கட்சியில் இணைந்தாரா அல்லது வேறு ஏதாவது நோக்கத்திற்காக இணைந்தாரா என்று தவெகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பின்னர் காரில் இருந்த அதிமுக கொடியை அகற்றிவிட்டு, தவெக கொடியை செங்கோட்டையன் பொருத்தினார். ஆனால் செங்கோட்டையனுக்கு விஜய் கட்சி துண்டு அணிவித்த போதுகூட, அவரது சட்டைப் பையில் ஜெயலலிதாவின் படம் இருந்தது. அதற்கு பின்னரும் விஜய் படத்தை தவிர்த்து, ஜெயலலிதாவின் படத்துடனேயே அவர் வலம் வருகிறார். அவரது சமூக வலைதளப் பக்கத்திலும் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் தான் முகப்பு பக்கத்தில் இருக்கிறதே தவிர, விஜய்யின் படம் இடம்பெறவில்லை. அதுமட்டுமல்லாது தான் தவெகவில் இணைந்த தகவலோ அல்லது புகைப்படமோ கூட அதில் இல்லை.
இதுகுறித்து, தவெக தொண்டர்கள் விமர்சித்த நிலையில், விஜய்யுடன் இருக்கும் படத்தை மட்டும் முகப்பு படமாக நேற்று மாலை செங்கோட்டையன் மாற்றி உள்ளார். ஆனால், தவெகவில் இணைந்ததாக எந்த பதிவும் போடவில்லை.
இதுமட்டுமின்றி கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் அலுவலகத்தில் விஜய் படத்துடன் வைக்கப்பட்டுள்ள தவெக பேனரில், தவெக கொள்கைத் தலைவர்கள் படங்களை சிறியதாகவும், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்களை பெரியதாகவும் போட்டு அவர்கள் மீதான தன் பாசத்தை வெளிக்காட்டி இருக்கிறார்.
தவெகவில் இணைந்த பின் எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார். அப்போது, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் ஆகிய நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர். இதனால் மனதளவில் இன்னும் செங்கோட்டையன் அதிமுக நிர்வாகி போலவே இருப்பதாகவும், இப்படங்களை அகற்றிவிட்டு தவெக கொள்கைத் தலைவர்கள் மற்றும் விஜய் படங்களை மட்டுமே செங்கோட்டையன் வைக்க வேண்டும் என்றும் தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக வேறு கட்சி தலைவர்கள் நினைவிடத்துக்கு மாற்று கட்சி தலைவர்கள் சென்று மரியாதை செலுத்த மாட்டார்கள். ஆனால், அதிமுகவில் இருந்த வந்த செங்கோட்டையன் தனது விசுவாச தலைவர்களின் நினைவிடத்துக்கு தவெக முக்கிய நிர்வாகிகளை அழைத்து சென்று மரியாதை செலுத்த வைத்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. கட்சி மாறினாலும் கட்சிக்கு கட்டுப்படாமல் தனக்கு பிடித்தவற்றை தான்தோன்றித்தனமாக செங்கோட்டையன் செய்து வருவது, பாஜவின் அழுத்தம் காரணமாக ஸ்லீப்பர் செல்லாக இருப்பதற்காகவே கட்சி மாறியிருப்பதை அவரது நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் உறுதிப்படுத்துவதாக தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
* கபட நாடகம் : அதிமுக குற்றச்சாட்டு
‘அதிமுகவை விமர்சித்துவிட்டு தவெகவில் செங்கோட்டையன் சேர்ந்தார். செங்கோட்டையன் அலுவலகம் முன்பு உள்ள தவெக பேனரில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இருப்பதும் அவர் அண்ணா, எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்றதும் இரட்டை வேடம் போட்டுவிட்டு கபட நாடகம் ஆடுவதை காட்டுகிறது. இது புரிதல் இல்லாத அரசியல், வெட்கக்கேடான அரசியல். கடந்த ஆட்சியில் இவர் அமைச்சராக இருந்தபோது தூய்மை இல்லாத நிர்வாகமா’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்து உள்ளார்.
* ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவர் செங்ஸ்..
‘நடிகர் விஜய் தூய ஆட்சி தருவார் என்று தற்போது கூறும் செங்கோட்டையன், அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, உதிரி பாகங்கள் வாங்குவதில் ஊழல் செய்தார் என 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2000ம் ஆண்டு உத்தரவிட்டது. இதேபோல், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், ஊழல் பற்றி அவர் பேசுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் புகைப்படத்தை இன்றைக்கும் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வலம் வருகிறார்’ என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
* அன்றொரு பேச்சு இன்றொரு பேச்சு
2024ல் செங்கோட்டையன் விஜய் குறித்து பேசும்போது, ‘‘நடிகராக உள்ள விஜய் கட்சி தொடங்கி வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறார். ஆனால், எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர். போல் வெற்றி பெற முடியாது. இளைஞர்கள் விஜய் பின்னால் சென்று விட்டனர் என்று சொல்ல முடியாது’’ என்று தெரிவித்தார். தற்போது தவெகவில் இணைந்த பிறகு அவர், ‘‘இளவல் விஜய் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார். 2026ல் மாபெரும் புரட்சி உருவாகி வெற்றி என்ற இலக்கை இளவல் விஜய் எட்டுவார். தமிழ்நாட்டில் புதிய மாற்றம், தூய்மையான அரசியல் வேண்டும் என தவெகவில் இணைந்திருக்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
* அதிமுகவில் தவறி முளைத்த களை செடி
சமீபத்தில் செங்கோட்டையன் அளித்த பேட்டி ஒன்றில், எந்த காரணம் கொண்டும் அதிமுகவை விட்டு வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இல்லை என்றும், தன் வாழ்நாள் முழுவதும் அதிமுக கொடியை என்னுடைய இறுதி நாளில் எனக்கு போர்த்த வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என்றும் கூறியிருந்தார். இப்படி கூறி இருந்த செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்திருப்பது என்பது அயோக்கியதனம் எனவும், அதிமுகவில் தவறி முளைத்த களை செடியான செங்கோட்டையனை எடப்பாடி கட்சியை விட்டு நீக்கியது சரியான நடவடிக்கை என்றும் அதிமுக நிர்வாகிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
* முதல் பயணமே தடங்கல்
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு இன்டிகோ விமானம் கோவைக்கு கிளம்பியது. அந்த விமானத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். விமானம் 1.40 மணிக்கு கோவை வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக பெங்களூருவிற்கு திருப்பி விடப்பட்டது. செங்கோட்டையனை வரவேற்க 500க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்களை நிர்வாகிகள் அழைத்து வந்தனர். ஆனால், மணிக்கணக்கில் காத்திருந்த தவெக தொண்டர்கள் விரக்தியில் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்றனர். பெங்களூரு திருப்பி விடப்பட்ட விமானம் 2.30 மணி நேரம் தாமதமாக, மாலை 4.15 மணியவில் அந்த கோவை விமான நிலையம் வந்தடைந்தது. இதனால், பல மணி நேரம் காத்திருந்தவர்கள் கலைந்து சென்றதால் செங்கோட்டையனுக்கு 100 பேர் மட்டுமே வரவேற்பு அளித்தனர். தவெகவில் புதிய பயணத்தை தொடங்கிய செங்கோட்டையன் முதல் பயணம் முற்றிலும் கோணலாக முடிந்ததால் அவர் அப்செட் அடைந்தார்.
* காலை வாரிவிடுபவர் எடப்பாடி பழனிசாமி
கோபியில் செங்கோட்டையன் கூறுகையில், ‘காலை வாரி விடுபவர் நாளை மறுநாள் (நாளை) கோபி வருகை தர உள்ளார். அவர்களுக்கு நான் என்ன செய்தேன் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அவரை முதலமைச்சராக்க நான் முன்மொழிந்தேன். எனக்கு வந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்தேன். ஆனால் அங்கே மனித நேயம் இல்லை. சமத்துவம் இல்லை. 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நான் உழைத்தது மக்களுக்கு தெரியும். சாதாரண தொண்டனாக கூட இருக்க விடாமல் நீக்கினார். இவரெல்லாம் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்’ என்றார்.
* எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தவெகவில் பணியாற்றுவேன்: செங்கோட்டையன் ‘விசுவாச’ பேட்டி
தவெகவில் இணைந்த செங்கோட்டையன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி: அதிமுகவில் இருந்து 3 முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த எம்.ஜி.ஆர் என்னை அடையாளம் காட்டினார். கட்சி இருகூறுகளாக பிரிந்த நேரத்தில் ஜெயலலிதா உடன் உறுதுணையாக இருந்து பணியாற்றினேன். இன்று மக்கள் சக்தியாக இருக்கிற தவெக தலைவர், எவ்வளவு தடைகள் வந்தாலும், மக்கள் சக்தி என்ற சக்தியின் மூலம் முதலமைச்சராக அரியணையில் அமர்வார். ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாய் வந்தாலும் அதை தூக்கியெறிந்துவிட்டு வந்துள்ளார். என் உயிர் மூச்சு உள்ளவரை அவரை முதலமைச்சராக உருவாக்க பாடுபடுவேன்.
என்னை பொருத்தவரையிலும் தவெகவில் இணைந்த பிறகும் ஜெயலலிதா படத்தை வைத்துக் கொண்டிருக்கிறீர்களே என கேட்கிறார்கள். இங்கே ஜனநாயகம் இருக்கிறது. யார் படத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். விஜய்யின் வாகனத்திலும் எம்.ஜி.ஆர், அண்ணா படம் இருக்கிறது. 9 முறை எம்.எல்.ஏவாக இருந்த என் பின்னால் மக்கள் இல்லை என அவர் (எடப்பாடி பழனிசாமி) சொல்லலாமே தவிர, அதை மக்கள் பார்த்து கொள்வார்கள். 3 முறை வாக்கே கேட்காமல் என்னை வெற்றி பெற வைத்த மக்கள் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
* செங்கோட்டையனை பாஜ ஏமாற்றியதா? பொன்னார் புதுவிளக்கம்
புதுக்கோட்டையில் பாஜ மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: செங்கோட்டையனை பாஜ ஏமாற்றிவிட்டதாக கூறுகிறார்கள். நம்பி வந்தவர்களை ஏமாற்றும் பழக்கம் பாஜவுக்கு கிடையாது. எந்த நோக்கத்துடன் வருகிறார்கள் என்றும் பார்க்க வேண்டும். அதைக்கொண்டுதான் உடனே ஏற்றுக்கொள்வதா, ஏற்கக்கூடாதா, காலம் தாழ்த்தி ஏற்றுக்கொள்வதா என முடிவு செய்ய முடியும். கூட்டணி என்பது அவரவரின் லாப, நஷ்டக்கணக்குகளை பார்த்துதான் எல்லோரும் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
* தவெகவை இழுக்க அசைன்மெண்ட் செங்கோட்டையன் பாஜவின் ஸ்லீப்பர் செல்: அமைச்சர் ரகுபதி பேட்டி
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுகவும், அதிமுகவும் இணைந்து தான் செயல்படுகிறார்கள் என்று கூறும் செங்கோட்டையனுக்கு நேற்று வரை புத்தி எங்கே போனது. யாரை வைத்தும் யாரும் எந்த அரசியலும் செய்தாலும் மக்களுக்கு செய்கின்ற களப்பணிதான் மக்கள் மனதில் நிற்கும். தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த நான்கரை ஆண்டு காலமாக செய்கின்ற களப்பணிகள் திமுக கூட்டணி வெற்றிக்கு துணை நிற்கும். தற்போதும் புனிதமான ஆட்சி தான் நடக்கிறது. எதிர்காலத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புனிதமான ஆட்சிதான் நடைபெறும்.
முகத்தில் கர்ச்சீப் பொத்தி செல்லும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. அதற்கு தகுதியுடைய இந்தியாவிலேயே ஒரே அரசியல் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை நிரூபித்திருக்கிறார். செங்கோட்டையனை பாஜவின் ஸ்லீப்பர் செல்லாக பார்க்கிறேன். அது உண்மையா, இல்லையா என்பது மிக விரைவில் தெரியவரும். பாஜ, அவரை ஏமாற்றாமல் இருந்திருந்தால் தவெகவிற்கு சென்றிருக்க மாட்டார். செங்கோட்டையன் பாஜவின் ஸ்லீப்பர்செல். அமித்ஷா அழைக்க மாட்டாரா என்று இன்றைக்கும் ஏங்கி கொண்டிருப்பவர். தவெகவை, பாஜவுக்கு இழுத்து வரும் அசைன்மெண்டிற்கு தான் அனுப்பப்பட்டிருக்கிறார் என்பது எங்களுடைய கருத்து.
எடப்பாடி பழனிச்சாமி, வெறுத்துப்போய் தான் செங்கோட்டையனை விரட்டிவிட்டார். அவருக்கும், செங்கோட்டையனுக்கும் நல்ல புரிதல் கிடையாது. அதே நேரத்தில் பாஜவோடு, செங்கோட்டையனுக்கு நல்ல புரிதல் உள்ளது. எந்த பொறுப்பிலும் இல்லாமல் அமித்ஷாவை போய் டெல்லியில் சந்தித்துள்ளார். அதன் பிறகு அவர் ஒரு முடிவு எடுக்கிறார். செங்கோட்டையன், தினகரனோடு செல்கிறார், ஓபிஎஸ்சோடு செல்கிறார், சசிகலாவை சந்திக்கிறார். இப்படி பல்வேறு குழப்பங்களை எல்லாம் செய்துவிட்டு கடைசியாக பாஜவின் ஸ்லீப்பர் செல்லாக தவெகவுடன் சென்றிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
* செங்கோட்டையன் குறித்த கேள்வி: வேலுமணி ஓட்டம்
ஊட்டியில் அதிமுக., சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கோவை மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். தொடர்ந்து, அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவில் இருந்து தவெகவிற்கு சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு எவ்வித பதிலும் கூறாமல் சென்றுவிட்டார்.

