Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜெயலலிதாவுடன் பிரேமலதா இருப்பதுபோல எல்.கே.சுதீஷ் பதிவிட்ட படத்தால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு

சென்னை: ஜெயலலிதாவுடன் பிரேமலதா உள்ளது போன்ற படத்தை திடீரென தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பதிவிட்டுள்ளார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றது. மாநிலங்களவை சீட் விவகாரத்தில் அதிமுக, தேமுதிக இடையே மோதல் உருவானது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். இதையடுத்து யாருடனும் கூட்டணி இல்லை என்று பிரேமலதா அறிவித்தார். வரும் ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தான் கூட்டணி யாருடன் என்று அறிவிப்போம் என்றும் அறிவித்துள்ளார்.

நாங்கள் இடம்பெறும் கூட்டணிதான் வரும் தேர்தலில் வெற்றி பெறும் என்றும் பேசி வருகிறார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சியை பலப்படுத்தும் நோக்கில், உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் நடைபயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரேமலதா நேரில் சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார். இதனால், திமுக பக்கம் தேமுதிக போகிறதா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பிரேமலதா மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பதில் அளித்திருந்தார்.

இதற்கிடையில் அண்மையில் திருப்பத்தூரில் பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். இந்நிலையில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் ஜெயலலிதாவுடன் பிரேமலதா இருக்கும் புகைப்படத்தை திடீரென பதிவிட்டுள்ளார். எல்.கே. சுதீஷின் இந்த பேஸ்புக் பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரேமலதா அளித்த பேட்டியில், “ஜெயலலிதா ஒரு சாதனைப்பெண்மணி, இரும்புப் பெண்மணி. ஜெயலலிதா இடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாது. ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா தான். ஜெயலலிதா போன்று சிங்கப்பெண்ணாக நான் இருப்பதாக சுதீஷ் கூறியிருந்தார். தமிழ்நாட்டில் பல சவால்களை சந்தித்த ஜெயலலிதா என் ரோல் மாடல் என கூறியிருக்கிறேன். எம்.ஜி.ஆரை மானசீக குருவாக அறிவித்தவர் விஜயகாந்த். கேப்டனை மானசீக குரு என சொல்பவர்கள் அவரது படத்தை புகைப்படத்தை பயன்படுத்தலாம்” என்றார்.