ஜெயலலிதா இசை பல்கலை மானிய நிதி ரூ.5 கோடியாக உயர்வு இசை கல்லூரி மாணவர்களுக்கும் நான் முதல்வன் திட்டப்பயன்கள்: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: இசை கல்லூரி மாணவர்களுக்கும் இனி ‘நான் முதல்வன்' திட்டப் பயன்கள் வழங்கப்படும். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக மானிய நிதி ரூ.5 கோடியாக உயர்த்தப்படும் என பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் 3வது பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் விழாவுக்கு தலைமை வகித்து 1,372 பேருக்கு பட்டங்களை வழங்கினார். கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி அரசு கவின்கலைகல்லூரி முன்னாள் முதல்வரும், மூத்த ஓவியருமான சந்துரு, நடிகர் சிவக்குமார் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும் 10 பேர் முதல்வரிடமிருந்து பிஎச்டி பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்ட தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்துக்கு நாங்கள் எந்தப் பாகுபாடும் காட்டவில்லை. 2021க்குப் பிறகு, இந்த பல்கலைக்கழகத்தை இன்னும் செழுமையாக வளர்த்திருக்கிறோம். கலைதான், மனிதர்களை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தி காட்டுவதோடு, மேம்பட்ட உயிரினமாக காட்டுகிறது. நம்முடைய அரசு சார்பில், சங்கத்தமிழ் நாள்காட்டி குறளோவியம் நாள்காட்டி என்று வெளியிட்டிருக்கிறோம். சங்கத்தமிழ் நாள்காட்டியில், சிறந்த சங்கப்பாடல்களை தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு பொருள், ஆங்கில மொழிபெயர்ப்பு, அதற்கு பொருத்தமான ஓவியங்கள் இடம்பெற்றிருக்கிறது!
அதேபோல், குறளோவியம் நாள்காட்டியில் 365 திருக்குறள்களும், அதற்கான பொருள், ஆங்கில மொழிபெயர்ப்பு ஓவியங்களும் இடம் பெற்றிருக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால், இந்த ஓவியங்கள் எல்லாம், தமிழ்நாடு முழுவதும் இருக்கும், உங்களைப் போன்ற மாணவர்கள், ஆசிரியர்கள் வரைந்த ஓவியங்கள்! அதில், அவர்களின் பெயர் - பள்ளி கல்லூரி பெயர் என்று அனைத்து விவரங்களும் இருக்கும்! அந்த நாள்காட்டிகளில் இருக்கும் ஓவியங்களை பார்க்கும்போது, அவ்வளவு அழகாக பொருள் உள்ளதாக இருக்கும். இது பட்டமளிப்பு விழா என்றாலும், கலை வளர்க்கும் நமது அரசின் சார்பில் 4 புதிய சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட விரும்புகிறேன்.
முதலாவது அறிவிப்பு. நாட்டுப்புற கலையில், குறிப்பாக ‘பறையாட்டம்’ கலை வல்லுநரான வேலு ஆசானின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தின் மரபு கலைகளான கிராமிய கலைகள் மற்றும் நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் வகையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்தில் இருக்கும் வலையங்குளத்தில், கிராமியக் கலைப் பயிற்சிப் பள்ளி அமைக்க நிலம் ஒதுக்கீடு அரசின் சார்பில் வழங்கப்படும். 2வது அறிவிப்பு இசை பல்கலைக்கழகத்தில் கவின்கலையில், புதியதாக கலை பாதுகாப்புப் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு 2026-27ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய முதுகலை பட்டப்படிப்பின் மூலமாக, மாணவர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும், அதிக வருமானம் ஈட்டவும் வழிவகை செய்யப்படும்.
3வது அறிவிப்பு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திறன் மற்றும் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், ஊதியம் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக தற்போது வழங்கப்படும் ரூ.3 கோடி மானியத் தொகை ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். 4வது அறிவிப்பு “நான் முதல்வன்” திறன் சார்ந்த படிப்புகள் இசை மற்றும் கவின் கலை பயின்று வரும் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலமாக, மாணவர்களுக்கு ஆங்கில உரையாடல் பயிற்சி மற்றும் டிஜிட்டல் திறன் சார்ந்த படிப்புகள் வழங்கப்படும்.
அதேபோல், இப்போது ஏ.ஐ மூலமாக பலரும் ஓவியங்கள் பாடல்கள் இசை என்று உருவாக்குகிறார்கள். அதனால், நமக்கான வாய்ப்புகள் குறைந்துவிடுமோ என்று நீங்கள் யாரும் கவலைப்படக் கூடாது. எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், அதனால் மனிதர்களின் சிந்தனையை வெல்ல முடியாது. தொழில்நுட்பத்தை நமது பலத்திற்கு நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.உங்களின் அறிவை திறமையை உங்கள் கலைகளில் வெளிப்படுத்துங்கள். கலைகள்தான், மொழியை பண்பாட்டை இனத்தைக் காக்கும். தமிழுக்கும் தமிழினத்திற்கும் பெருமை சேர்த்திடும் படைப்புகளை நீங்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் சிவகுமார் ஏற்புரையாற்றி பேசும்போது, ‘‘தனது தந்தையைப் போல மிகச்சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின். காலை உணவு திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் புதுமைப்பெண் திட்டம், வீடு தேடி மருத்துவம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி திறம்பட ஆட்சி செய்து வரும் ஸ்டாலின் மீண்டும் முதல்வர் பொறுப்பில் நீடிக்க வேண்டும்’’ என்றார். துணைவேந்தர் சவுமியா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், கலை பண்பாட்டுத்துறை செயலர் மணிவாசன், இயக்குநர் எஸ்.வளர்மதி, பல்கலைக்கழக பதிவாளர் பூமாலினி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முத்துக்குமரன், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.

