திருச்சி: கடந்த 23 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஜெயலலிதா மீதான வழக்கில் சுப்பிரமணிய சுவாமி சாட்சியம் அளித்தார். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையம் கடந்த 1994ம் ஆண்டு தாக்கப்பட்டது. இந்த வழக்கில் திருவாரூரை சேர்ந்த ரவி (எ) மாட்டு ரவி, கொளத்தூர் மணி ஆகியோர் மீது வழக்குப்பதிந்த போலீசார், அவர்களை தேடி வந்த நிலையில் பாஜ கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி கடந்த 2001ம் ஆண்டு, அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் திக தலைவர் கி.வீரமணி ஆகியோர் மீது சென்னை ஐகோர்ட்டில் ஒரு புகார் அளித்தார்.
அதில், ‘அம்மாபேட்டை போலீஸ் நிலைய தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளில் ஒருவரான மாட்டு ரவி, போலீஸ் பிடியில் இருந்து தப்புவதற்காக என் வீட்டில் மறைந்திருந்ததாக ஜெயலலிதா மற்றும் கி.வீரமணி ஆகியோர் அவதூறு செய்திகள் பரப்பினர். இதற்காக மாட்டு ரவியை பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பிலிருந்தும் கொலை மிரட்டல்களும் வருகிறது. என் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுமாக உள்ளது. ஜெயலலிதா, கி.வீரமணி மற்றும் மாட்டு ரவி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர போலீசாருக்கு உத்தரவிட்டனர். போலீசார் விசாரணையில், சுப்ரமணிய சுவாமி குற்றச்சாட்டுப்படி இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்பது தெரிய வந்தது. ஜெயலலிதா, கி.வீரமணி ஆகியோர் பெயரை நீக்கிவிட்டு மாட்டு ரவி மீது மட்டும் வழக்கு பதிந்து ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் கடந்த 2002ம் ஆண்டு திருச்சி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பல்வேறு தடை, தாமதங்களால் 23 ஆண்டுகளாக நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த இந்த வழக்கு விசாரணையில், சுப்பிரமணி சுவாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி, நீதிபதி கிருஸ்டோபர் முன்னிலையில் சாட்சியம் அளித்தார்.
அதில், தற்போது எனக்கு 89 வயதாகிறது. எனது உடல் நிலையை கருத்தில் கொண்டு, இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தங்கள் தரப்பில் இருந்து வழக்கை வாபஸ் பெறுவதாக உறுதி மொழி பத்திரத்தினை வரும் 22ம்தேதி தாக்கல் செய்யும்படி கூறி, விசாரணையை 22ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.