காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரத்தில் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம், ஓரிக்கை, பூக்கடை சத்திரம், காந்தி சாலை பெரியார் தூண் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு, இபிஎஸ் அணி காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில், அதிமுக முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக உரிமை மீட்பு குழு அணி சார்பில், காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை பகுதியில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு, மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் கோபால், சோமங்கலம் ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் பொருளாளர் வஜ்ரவேலு, துணை செயலாளர் ஷகிலா வேலு, பொதுக்குழு உறுப்பினர் பழனி, ஒன்றிய செயலாளர்கள் மாகரல் சசி, மாலிக் பாஷா, முனிரத்தினம், கோவிந்தராஜ், விஜயன், அருண், படப்பை முரளி, வல்லம் பழனி, பேரூராட்சி நிர்வாகிகள் வாலாஜாபாத் ஜெயகாந்தன், குலசேகரன், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மதுராந்தகம்: ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா மதுராந்தகம் நகர அதிமுக சார்பில், எம்ஜிஆர் சிலை அருகே நேற்று காலை நகர செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பேரவை செயலாளர் சீனிவாசன், துணைச் செயலாளர் ரங்கநாதன் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இதே போன்று மாமண்டூரில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு எம்எல்ஏ மரகதம் குமரவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவர் கீதா கார்த்திகேயன், துணைத் தலைவர் குமரவேல், ஒன்றிய செயலாளர்கள் குமரன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.