ஜெயலலிதாவே சொன்னதுதான்... அதிமுககாரங்க எங்க கட்சி கொடியையே பிடிக்க மாட்டாங்க... செல்லூர் ராஜூ ஒரே போடு
மதுரை: ‘அதிமுககாரங்க எங்க கட்சி கொடியையே பிடிக்க மாட்டோம். அதுல அடுத்த கட்சிக் கொடியை பிடிச்சு ஆட்டுவோமா’ என தவெக கொடி பிரச்னை தொடர்பாக செல்லூர் ராஜூ விளக்கமளித்தார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளாங்குடி பகுதியில் புதிய ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். அவரிடம் செய்தியாளர்கள், ‘‘எடப்பாடி பழனிசாமி பரப்புரையில், அதிமுகவினரே தவெக கொடியை காட்டினரா? டிடிவி.தினகரனும் சொல்கிறாரே’’ என்றனர்.
இதற்கு பதிலளித்து செல்லூர் ராஜூ கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கே கொடியை தவெக தொண்டர்கள், நிர்வாகிகள்தான் காட்டுனாங்க... டிடிவி.தினகரன் மாதிரி ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவாங்க. காழ்ப்புணர்ச்சியாலே பேசுவாங்க. தவெக தொண்டர்கள் எடப்பாடியை விரும்புறாங்க. அவர் போகும் இடங்களில் எல்லாம் தன்னெழுச்சியாக வர்றாங்க. அடுத்த கட்சிக் கொடியை தூக்குற அளவுக்கு எங்கள் கட்சி தரம் தாழ்ந்து போகும் கட்சியே கிடையாது.
டிடிவி.தினகரன் எம்பியாகவும், எல்லா பொறுப்பிலும் எங்கள் கட்சியில் இருந்துள்ளார். கடந்த 53 ஆண்டுகளில் அதிமுக தொண்டன் அடுத்த கட்சி கொடியை தூக்கிய வரலாறு உண்டா? கூட்டணி சேர்ந்தால் தோள் கொடுப்போம். தோளில் தூக்கி வைத்து கொண்டாடுவோம். எங்களை எதிர்த்தா கீழே போட்டு மிதிச்சிட்டு போவோம். இதுதான் அதிமுக வரலாறு. அதிமுககாரங்க எங்க கட்சிக்கொடியையே தூக்க மாட்டாங்க. ஜெயலலிதாவே சொல்வாங்க. ஏப்பா நம்மாளுக நம்ம கொடியை தூக்க மாட்டேங்கிறீங்கன்னு கேப்பாங்க. கூட்டணி கட்சிகளான பார்வர்டு பிளாக், மூவேந்தர் முன்னணின்னு எல்லா கட்சியும் கொடி பிடிப்பாங்க. எங்க கட்சி கொடியையேயே பிடிக்க மாட்டோம். அதுல அடுத்த கட்சிக் கொடியை பிடிச்சு ஆட்டுவோமா? இது என்னங்க? தேவையில்லாததை கேட்டு எங்களை கோபப்படுத்தாதீங்கப்பா? என்னப்பா நீங்க, மதுரைக்காரங்ககிட்டே போயி இதெல்லாம் கேட்காதீங்கப்பா.
இவ்வாறு கூறினார்.