Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வக்பு திருத்தச் சட்ட தீர்ப்பு பாதகமான திருத்தங்களை அங்கீகரிக்கும் தவறான தீர்ப்பு: மமக தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: வக்பு திருத்தச் சட்ட தீர்ப்பு பாதகமான திருத்தங்களை அங்கீகரிக்கும் தவறான தீர்ப்பு என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றசாட்டு வைத்துள்ளார். அரசமைப்பின் அடிப்படை விதிகளை மீறும் பல பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கவில்லை. வக்பு வாரியத்தில் மட்டும் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை இணைக்க சொல்வது பாரபட்சமானது என தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "வக்ப் திருத்தச் சட்டம் 2025 தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தீர்ப்பு பாதகமான பல திருத்தங்களை அங்கீகரிக்கும் தவறான தீர்ப்பாக அமைந்துள்ளது. இந்தத் தீர்ப்பு முழுமையான திருப்தியை அளிக்கும் வகையில் அமையவில்லை.

ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 44 திருத்தங்கள் இருந்தன. (உண்மையில் 33 சேர்த்தல்கள் 45 மாற்றீடுகள் 37 நீக்கல்கள் என 115 திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தன). இந்த 44 அபத்தமான திருத்தங்களை முழுமையாகக் கவனத்தில் கொள்ளாமல் ஒரு சில திருத்தங்களை மட்டும் இந்தத் தீர்ப்பில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் வக்ப் திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகளை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பினும், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை விதிகளை மீறும் பல பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை செய்யப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் மத்திய வக்ப் குழுமத்தின் 22 உறுப்பினர்களில் அதிகபட்சம் 4 முஸ்லிமல்லாதோர் இருக்கலாம் என்றும், மாநில வக்ப் வாரியங்களில் 11 உறுப்பினர்களில் அதிகபட்சம் 3 முஸ்லிமல்லாதோர் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தரவு பாரபட்சமானது. இந்து சமய அறநிலையத்துறை அல்லது சீக்கியர்களின் குருத்துவாரா நிர்வாகத்தில் அம்மதத்தைச் சேராதவர்கள் உறுப்பினர்களாக ஆக முடியாத நிலையில் வக்ப் வாரியத்தில் மட்டும் முஸ்லிமல்லாத உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது பாரபட்சமானது.

வக்ப் செய்வதற்கு ஒருவர் குறைந்தது 5 ஆண்டுகள் இஸ்லாத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற திருத்த விதியை உச்சநீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. வக்பை உருவாக்குவதற்கு அந்த விதி அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இத்துடன் நிற்காமல் வக்ப் செய்யத் தகுதியுள்ள இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம் யார் என்பது பற்றிய விதிகளை மாநில அரசுகள் வகுக்கும் வரை அந்தத் தடை நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது மாநில அரசுகளுக்கு இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம் என்பவர் யார் என்பதை வரையறை செய்யும் உரிமை தருகின்றது. இதன் மூலம் மாநில அரசுக்கு விருப்பமான முஸ்லிம்கள் மட்டுமே வக்ப் செய்ய இயலும் என்ற ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தீர்ப்பில் வரவேற்கத்தக்கவை;

* வக்ப் சொத்துகள் குறித்து சர்ச்சை எழுந்து அது நீதிமன்றத்தில் வழக்காக இருக்கும் போது இறுதித் தீர்ப்பு வரும் வரை பறிமுதல் செய்யவோ அல்லது அதிகாரப்பூர்வப் பதிவுகளில் மாற்றவோ முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

* அரசு அதிகாரியின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வக்ப் சொத்து உரிமையை நிரூபிக்க வேண்டுமெனக் கூறிய பிரிவை நீதிமன்றம் தடை செய்துள்ளதும் வரவேற்கத்தக்கது.

*எந்த அரசு அதிகாரியும் யார் வக்பை உருவாக்கத் தகுதியானவர் என்று தனிப்பட்ட முறையில் முடிவு செய்ய முடியாது எனத் தெளிவுபடுத்தியுள்ளதும் வரவேற்கத்தக்கது.

*ஓரு குறிப்பிட்ட வக்ப் தொடர்பான விசாரணை நடைபெறும்போது அது வக்ப் அல்ல என்று கருதப்படமாட்டாது என்றும் இறுதி தீர்ப்பு வரும் வரை எந்த வக்ப் சொத்தும் பறிமுதல் செய்யப்படக்கூடாது அல்லது அதன் பதிவுகள் மாற்றப்படக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது

பயன்பாட்டின் வழியே வந்த வக்ப் (Waqf by User) குறித்த நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு மிகுந்த அச்சத்திற்குரியதாக அமைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் கருத்தின் காரணமாகப் பல நூற்றாண்டுக் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பள்ளிவாசல்கள், அடக்கத்தலங்களுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இடைக்கால உத்தரவின் 143 முதல் 152ஆம் பத்திகளில் உச்சநீதிமன்றம் கூறியவை பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கியுள்ளன.

* முஸ்லிமல்லாதார் வக்ப் செய்யலாம் என்று அனுமதித்த 104வது பிரிவு

* ஆக்கிரமிக்கப்பட்ட வக்ப் சொத்துகளை மீட்கக் காலவரையறை சட்டம் 1963 (Limitation Act) பொருந்தாது என்ற 107வது பிரிவு

* நாட்டை விட்டு வெளியேறியவர்களின் வக்ப் சொத்து குறித்த சிறப்புப் பிரிவுகளைக் கொண்ட 108வது பிரிவு

ஆகிய 3 பிரிவுகளும் திருத்தச் சட்டத்தில் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட இம்மூன்று பிரிவுகள் குறித்தும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. இடைக்கால தீர்ப்பில் 107 மற்றும் 108 வது பிரிவு குறித்து குறிப்பிடப்படாது இறுதி தீர்ப்பு வரும் வரை சில முஸ்லிம் விரோத மாநில அரசுகள் வக்ப் சொத்துகளை கபளீகரம் செய்ய இது உதவிடும்"என தெரிவித்துள்ளார்.