ஜவஹர்லால் நேரு 137ஆவது பிறந்த நாள்: அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்!
சென்னை: பண்டித ஜவஹர்லால் நேரு 137ஆவது பிறந்த நாள் - 14.11.2025 அமைச்சர் பெருமக்கள் கத்திப்பாரா சந்திப்பில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். இந்தியத் திருநாட்டின் முதல் பிரதமராகத் திகழ்ந்த பண்டித ஜவர்ஹலால் நேரு 137ஆவது பிறந்த நாளான 14.11.2025 அன்று காலை 09.30 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள் சென்னை, கிண்டி, கத்திப்பாரா சந்திப்பில் அமைந்துள்ள அவர்தம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் 1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் நாள் பிறந்தார். தம்மடைய பள்ளிப் படிப்பு முதல் பாரிஸ்டர் பட்டம் வரை இங்கிலாந்து நாட்டிலுள்ள புகழ்மிக்க பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயின்றார். அவர் படிக்கின்ற காலத்திலேயே உலக அரசியலில் அதிக கவனமும், குறிப்பாக, அடிமைப்பட்டிருந்த நாடுகளின் மீது அதிக அக்கறையும் கொண்டிருந்தார். 1919ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம் அவரது தீவிர அரசியல் வாழ்க்கைக்குக் காரணமாக அமைந்தது. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், "நவீன இந்தியாவின் சிற்பி" என்று நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்பட்டார்.
அண்ணல் காந்தியடிகளின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக உருவெடுத்தார். சுதந்திரப் போராட்ட காலத்தில் அந்நிய நாட்டின் அடிமைத்தனத்தை எதிர்க்கின்ற வகையில், ஆங்கிலேய அரசுக்கு எதிராக அடுத்தடுத்து நடைபெற்ற பல்வேறு தொடர் போராட்டங்களில் ஏறத்தாழ 9 ஆண்டு காலம் சிறைத் தண்டனை பெற்றார். சிறையில் இருந்த நாட்களில் அவர் எழுதிய உலக வரலாற்றின் துளிகள்", "இந்தியாவின் தரிசனம்", "விடுதலையை நோக்கி" ஆகிய நூல்களும், சுதந்திர தாகம் குறித்துத் தம் மகள் இந்திராகாந்தி அவர்களுக்கு எழுதிய 137 கடிதங்களின் தொகுப்புகளான "சுயசரிதை" நூலும் இன்றளவும் உலகளவில் பேசப்படும் சிறந்த நூல்களாகத் திகழ்கின்றன. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியத் திருநாட்டின் முதல் பிரதமராக ஏறத்தாழ 17 ஆண்டு காலத் தொடர் ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள். கலப்புப் பொருளாதாரக் கொள்கை, பஞ்சசீலக் கொள்கை, அணிசேராக் கொள்கை போன்ற முக்கியக் கொள்கைகளை வகுத்தார். மேலும், அறிவியல், அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி, வேளாண் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவைகளுக்குக் கட்டமைப்புகளை உருவாக்கினார்.
பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களது ஆட்சியில், நெருக்கடிக் காலத்தில் மாநிலங்களின் ஒற்றுமை மற்றும் நலன் கருதிக் கொண்டு வரப்பட்ட மாநில மறுசீரமைப்பு, அலுவல் மொழி ஆணையம் ஆகியவை குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகளாகும். மொழி வாரியான பல்வேறு மாநிலங்களைக் கொண்டிருந்த நம் இந்திய தேசத்தின் ஜனநாயக மாண்பினைக் கட்டமைப்பதிலும், அதனை நிலைநாட்டுவதிலும் உறுதியாக இருந்தார். பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் இளைஞர் சமுதாயம் கற்றறிவதன் மூலமே நாட்டின் வளர்ச்சியினை மேம்படுத்திட இயலும் என்பதைக் கருத்தில் கொண்டு, கல்விக்கான அரிய பல திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்திய பெருமைக்கு உரியவர். அன்னாருடைய தியாகத்தையும், திறமையான நிருவாகத்தையும் பறைசாற்றுகின்ற வகையில், இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பலவற்றிற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுப் பெருமைப்படுத்தப்பட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள், "பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் அறிவாற்றலுடன் நல்ல இதயத்தைக் கொண்டிருந்த பெருமகன்; குழந்தையின் மழலையைக் கேட்டதும் தாமும் குழந்தையாகிவிடும் இயல்பினையும், ஏழைகள் வதைபடுவதைக் காணும்போது அவர்கள் நிலையெண்ணிக் கண்ணீர் சிந்திடும் கனிந்த இரக்கத்தினையும்: நல் இதயத்தினையும் பெற்றவர்" என்று பெருமிதம் பொங்கிடக் குறிப்பிட்டுள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1970ஆம் ஆண்டில், நேரு கண்ட ஜனநாயகம் என்ற தலைப்பில் ஆற்றிய உரையில், "நீதிக்கு எதிரானவற்றையெல்லாம் நேர் நின்று எதிர்த்ததாலே நேருவானார். இந்திய நீள் எல்லைக் கோடுதனைப் பெரும் பகைவர் கடந்த போது என்ன நேருமோ என்றேங்கிய இந்திய மக்கள் நெஞ்சின் துயர்துடைத்து ஏதுவும் நேராது நான் இருக்குமட்டும் எனச் சொல்லி நேருவானார்! "போற்றியுள்ளார்.
எனக் கவிபாடி பண்டித நேரு பெருமைகளைப் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள். தம் வாழ்நாளின் இறுதிக் காலம் வரையில் குழந்தைகள், இளைஞர் நலன், கல்வி வளர்ச்சி ஆகியவற்றிலேயே அதிகம் நாட்டம் கொண்டவராக இருந்தார். ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், குழந்தைச் செல்வங்களின் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பு காரணமாக அன்னாரது பிறந்த நாளான நவம்பர் 14ஆம் நாள் குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
