இன்றைய இளைஞர்கள் மத்தியில் இயற்கை விவசாயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நெல், காய்கறி, பழங்கள் என உணவுப்பொருட்களை இயற்கை முறையில் விளைவித்து வருவதைப் போல பல வகையான மலர்ச் செடிகளையும் இயற்கை வழியில் விளைவிக்கத் தொடங்கி விட்டார்கள். அந்த வரிசையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடையைச் சேர்ந்த மோகன் என்ற இளைஞர் தனது தந்தையுடன் இணைந்து ஆர்கானிக் முறையில் ஜாதி மல்லி, குண்டு மல்லி மலர்களை சாகுபடி செய்து வருகிறார். இவற்றுடன் கதலி வாழையையும் பயிரிட்டு வருகிறார். இதனை அறிந்து ஊட்டியின் நுழைவு வாயிலான மேட்டுப்பாளையத்திற்கு சென்றோம். அங்கிருந்து மோகனின் வயலைத் தேடி அடைந்தபோது ஜாதிமல்லி, குண்டுமல்லி மலர்களின் வாசத்தோடு நம்மை வரவேற்றுப் பேச ஆரம்பித்தார். ``காரமடை அருகில் உள்ள திம்மம்பாளையம்தான் எங்களுக்கு சொந்த ஊர். இன்ஜினியரிங் காலேஜ் படிக்கும்போதே அப்பாவுடன் இணைந்து விவசாயம் பார்த்தேன். படிப்புக்குப் பிறகு ஓமனில் வேலை கிடைத்தது. அங்கு எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக வேலை பார்த்தபோது திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். திருமணத்திற்குப் பிறகு சொந்த ஊருக்கே வந்து செட்டில் ஆகிவிட்டேன். அதில் இருந்து அப்பா செய்து வந்த விவசாயத்தில் என்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டேன்.
எல்லோரையும் போல நாங்களும் ரசாயன விவசாயத்தையே செய்து வந்தோம். மூன்று ஏக்கர் நிலத்தில் வைத்திருந்த வாழை, மல்லியில் சரியான மகசூல் கிடைக்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்று யூடியூப் சேனலில் பார்த்தபோது ரசாயனப் பயன்பாட்டால் மண் ஒரு கட்டத்தில் தன்னுடைய இயல்பான வளத்தை இழந்திருப்பது தெரியவந்தது. இதனை சரிசெய்வதற்கு ஒரே வழி இயற்கை விவசாயம்தான் என்பதை அறிந்து கொண்டு முழுவதுமாக இயற்கை விவசாயத்தில் இறங்கினேன். தோட்டத்தில் இருந்த வாழை, மல்லிச் செடிகளை முழுவதுமாக அகற்றிவிட்டு மூன்று மாதம் நிலத்திற்கு ஓய்வு கொடுத்தேன். பின்னர் நவதானிய விதைகளை கடலூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் இருந்து வாங்கி நிலத்தில் தூவி வளரச் செய்தேன். மூன்று மாதம் கழித்து அவற்றை மீண்டும் நிலத்திலேயே மடக்கி உழுதேன். இது நிலத்திற்கு தேவையான தழைச்சத்தைக் கொடுத்தது. பின்னர் ராமேஸ்வரத்தில் இருந்து குண்டு மல்லி நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்தேன். கோவையில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் உழவர்களிடம் இருந்து கதலி ரக வாழையையும், ஜாதி மல்லி நாற்றுகளையும் வாங்கி நட்டேன்.
ஜாதிமல்லி, குண்டுமல்லியை தலா 75 சென்ட்டில் சாகுபடி செய்திருக்கிறேன். மொத்தம் 2000 நாற்றுகள் வரை தேவைப்பட்டது. இந்த நாற்றுகளை ரூ.7000 கொடுத்து வாங்கினேன். இந்த நாற்றுகளை 5X5 அடி என்ற கணக்கில் நடவு செய்தேன். நாற்றுகளை நடவு செய்வதற்கு முன்பு மாட்டு உரம், ஆட்டுப்புழுக்கை, மக்கிய இலைதழைகளைப் போட்டு நிலத்தில் ஒருமுறை உழவு ஓட்டினேன். அதன்பிறகு ஒவ்வொரு நாற்றினையும் 15 செ.மீ ஆழத்தில் குழி எடுத்து அதில் மாட்டு எருவைப் போட்டு செடிகளை நடவு செய்தேன்.
செடிகளை நடவு செய்த இரண்டு நாள் கழித்து உயிர்த்தண்ணீர் கொடுத்தேன். பின்னர் ஒரு வாரம் கழித்து ஒரு லிட்டர் பஞ்சகவ்யத்துடன் பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் கலந்து செடிகளுக்கு நீர் பாய்ச்சினேன். சொட்டுநீர் பாசனம் என்பதால் தண்ணீர் அனைத்து இடங்களுக்கும் சீராக சென்றது. இருபது நாட்கள் கழித்து செடிகளைச் சுற்றி வளர்ந்து இருந்த தேவையற்ற களைகளை எடுத்து, அவற்றை காயவைத்து மீண்டும் செடிகளுக்கு உரமாக இட்டேன். மாதம் ஒருமுறை செடிகளுக்கு பஞ்சகவ்யம் கலந்த தண்ணீரைப் பாசனம் செய்தேன். இதனால் செடிகள் நன்கு செழிப்பாக வளர்ந்தது.செடிகளை நடவு செய்த ஐந்தாவது மாதத்தில் மொட்டுகள் வரத்தொடங்கியது. இந்த மொட்டுகள் கீழே விழுந்து விடும். இதனைக் கட்டுப்படுத்த பஞ்சகவ்யத்தோடு சேர்த்து மீன் அமிலத்தையும் செடிகளுக்கு கொடுக்க ஆரம்பித்தேன். ஆறாவது மாதத்தில் நான் எதிர்பார்த்த அளவிற்கு பூக்கள் வரத்தொடங்கின. இந்தப் பூக்களை நானே நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்துவிடுவேன். ஜாதிமல்லி மற்றும் குண்டுமல்லி இரண்டையும் வாசனை திரவியம் தயாரிக்கும் வியாபாரிகளுக்கு விற்றுவிடுவேன். இதுபோக மீதம் இருக்கும் பூக்களை விற்பனை செய்துவிடுவேன். குண்டுமல்லியில் சீசனைப் பொருத்து நல்ல மகசூல் கிடைக்கும். ஆனால் ஜாதிமல்லியில் தினமும் சீரான அளவில் பூக்கள் கிடைக்கும். ஒரு நாளைக்கு குண்டுமல்லியில் இருந்து மட்டும் எட்டு கிலோ வரை பூக்கள் கிடைக்கும். இதனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகவே விற்பனை செய்துவிடுவேன். முகூர்த்த நாட்களில் குண்டுமல்லி கிலோ ரூ.1000 வரை விற்பனையாகும். சராசரியாக ஒரு கிலோ குண்டு மல்லி பூவினை ரூ.500க்கு விற்பனை செய்வேன். ஒரு நாளைக்கு குண்டுமல்லி பூவில் சராசரியாக எனக்கு ரூ.4000 வருமானம் கிடைக்கும். இது சீசன் நாட்களில் கிடைக்கும் வருமானம். சீசன் இல்லாதபோது ஒரு நாளைக்கு ரூ.2000 மட்டுமே கிடைக்கும்.
ஜாதிமல்லியில் சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு கிலோ வரை பூக்கள் கிடைக்கும். ஜாதிமல்லியைப் பொருத்தவரையில் விசேஷ நாட்களில் மொட்டுகளாக விற்பனை செய்தால் ஒரு கிலோ ரூ.400 வரை போகும். மற்றபடி சராசரியாக ஒரு கிலோ ஜாதிமல்லி ரூ.200க்கு விற்பனையாகும். ஒரு நாளைக்கு ஜாதிமல்லியில் இருந்து மட்டும் எனக்கு ரூ.1200 வருமானமாக கிடைக்கிறது. கடந்த வாரம் மட்டும் எனக்கு குண்டுமல்லி மற்றும் ஜாதிமல்லியில் இருந்து மட்டும் ரூ.36 ஆயிரம் வருமானம் கிடைத்தது’’ எனக்கூறியபடியே வாழைத்தோட்டத்துக்கு எங்களை அழைத்துச் சென்று வாழை சாகுபடி பற்றி விளக்கினார். இந்த ஒன்றரை ஏக்கரில் சாகுபடி செய்ய 1100 கதலி வாழைக் கன்றுகள் தேவைப்பட்டன. எரு மற்றும் ஆட்டுப்புழுக்கை மட்டும்தான் இதற்கான உரம். இந்த வட்டாரத்தில் கதலி வாழை சாகுபடி செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதனால் என்னுடைய வாழைக்கு எப்போதும் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும். வாழையை வைத்த 10வது மாதத்தில் அறுவடை செய்து விடுவேன். எப்படியும் ஒரு தார் 9 கிலோ அளவில் இருக்கும். ஒரு தாரை ரூ.450க்கு விற்பனை செய்துவிடுவேன். காற்றில் விழுவது, கோயில் திருவிழாக்களுக்கு கொடுப்பது போக எப்படியும் 1000 வாழைத்தார்களை விற்பனை செய்து விடுவேன். மும்பை, கேரளா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து வாங்கி செல்கிறார்கள். வாழையில் ஒரு அறுவடைக்கு ரூ.4.5 லட்சம் வருமானம் கிடைக்கிறது. வாழைக்கன்றுகளையும் நானே நேரடியாக விற்பனை செய்கிறேன். இதில் இருந்து ஒரு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. மல்லி, வாழையில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் 30 சதவீதம் செலவு போக மற்றவை எல்லாம் லாபம்தான். எதிர்காலத்தில் இவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் எண்ணமும் இருக்கிறது’’ எனக்கூறும் மோகன் அதற்கான ஆயத்தப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
தொடர்புக்கு:
மோகன்: 80566 91007.
மல்லியில் மழைக்காலத்தில் அதிக நீர் தேங்கினால் வேர் அழுகல் நோய் ஏற்படும். இதனைத் தவிர்க்க மழைக்காலம் தொடங்கும் முன்னரே நிலத்தில் வடிகால் வசதியை செய்து விடுகிறார்.
வாழையைப் பொருத்தவரையில் புழுக்களின் தாக்குதல் மரத்தின் அடியில் அதிகம் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த வேப்பம் எண்ணெயை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மரத்தின் அடிப்பரப்பில் தெளித்து விடுகிறார்.