ஜப்பானில் பணிபுரியும் பொதுப்பணியாளர்களுக்கு அடிப்படை உரிமை வழங்க தீர்மானம்: அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் தகவல்
சென்னை: பன்னாட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு மாநாட்டில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார் வெளியிட்ட அறிக்கை: உலகளாவிய தொழிற்சங்கமான பன்னாட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் தெற்காசிய மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்தது. மாநாட்டில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் கலந்து கொண்டார். மாநாட்டில் ஜப்பானில் பணிபுரியும் பொதுப்பணியாளர்கள் அனைவருக்கும் தொழிலாளருக்கான அடிப்படை உரிமை வழங்க வேண்டி தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
இந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நேபாளத்தில் தற்போது கலவரங்கள் கட்டுக்கடங்காமல் உள்ள நிலைமையையும் பரிசீலித்த மாநாட்டில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.