டோக்கியோ: ஜப்பான் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நேற்று, அமெரிக்க வீரர் டெய்லர் ஃப்ரிட்சை வீழ்த்தி, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த அரை இறுதிப் போட்டியில், ஸ்பெயினை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ், நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் டெய்லர் ஃப்ரிட்ஸ், சக அமெரிக்க வீரர் ஜென்சன் புரூக்ஸ்பியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அல்காரஸ், டெய்லர் ஃப்ரிட்ஸ் மோதினர். துவக்கம் முதல் துடிப்புடன் ஆடிய அல்காரஸ் அற்புத ஆட்டத்திறனை வெளிப்படுத்தி புள்ளிகளை பெற்றார். அதனால் முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அவர் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அல்காரசின் ஆதிக்கமே காணப்பட்டது. அற்புதமாக ஆடிய அவர், 6-4 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
* ரோகன் போபண்ணா இணை தோல்வி
ஜப்பான் ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதியில் நேற்று, இந்திய வீரர் ரோகன் போபண்ணா, ஜப்பான் வீரர் டகேரு யுஸுகி இணை, பிரான்ஸ் வீரர் எடுவர்ட் ரோஜர் வேசலின், பிரெஞ்ச் மோனெகாஸ்க் வீரர் இணையுடன் மோதியது. இப்போட்டியில் சிறப்பாக ஆடிய எடுவர்ட் இணை, 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.