புதுடெல்லி: ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஜப்பானின் யோகோஹமா நகரில் ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் நடந்து வந்தன. இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா தொடர் வெற்றிகள் பெற்றதன் தொடர்ச்சியாக, அரை இறுதியில், எகிப்து வீராங்கனை ராணா இஸ்மாயிலுடன் மோதினார். அதில், 11-7, 11-1, 11-5 என்ற செட் கணக்கில் வென்ற ஜோஷ்னா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் எகிப்து வீராங்கனை ஹயா அலியுடன் ஜோஷ்னா மோதினார். அந்த போட்டியில் முதல் இரு செட்களை, 11-5, 11-9 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்திய ஜோஷ்னா, 3வது செட்டை, 6-11 என்ற புள்ளிக் கணக்கில் இழந்தார். இருப்பினும் அடுத்து நடந்த செட்டில் 11-8 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றிய அவர் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றார். அவருக்கு, ரூ. 13 லட்சம் பரிசாக கிடைத்தது.
+
Advertisement