Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா!

பெண்களுக்கு நடக்கும் அநீ திகளுக்கான சரியான நியாயம் ஏன் சட்டத்தில் கிடைப்பதில்லை என்பதை கோர்ட் டிராமா மூலம் எடுத்து வைத்திருக்கும் இன்னொரு திரைப்படம் தான் “ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா” ( JSK: Janaki Vs State of Kerala). சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் இப் படத்தை இயக்கி இருக்கிறார் பிரவீன் நாராயணன். கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் தற்போது ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. பெங்களூரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார் ஜானகி ( அனுபமா பரமேஸ்வரன்) திருவிழாவை கொண்டாட தனது தோழிகளுடன் கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு வருகிறார். திருவிழா முடிந்து தோழிகளை ஊருக்கு பேருந்தில் அனுப்பச் செல்லும் வழியில் ஒரு ஜூஸ் கடையில் ஜானகிக்கும் கடையில் இருக்கும் சிலருக்கும் இடையே மோதல் உண்டாகிறது. அதைத் தொடர்ந்து பிரச்சினை வேண்டாம் என முடிவெடுத்து தோழிகளை பேருந்தில் ஏற்றிவிட்டு திரும்பும் பொழுது தான் தனது மொபைல் ஜூஸ் கடையிலேயே விட்டுவிட்டு வந்ததை உணர்கிறார். அதை எடுக்கச் சென்ற ஜானகியை அடையாளம் தெரியாத ஒருவன் மயங்கச் செய்து பாலியல் பலாத்காரம் செய்கிறான். காவல் துறை திரட்டிய தகவல் , மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ஜுஸ் கடை முதலாளியும் , உடன் பணியாற்றும் நபரும் குற்றவாளியாக முடிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக களம் இறங்குகிறார் வழக்கறிஞர் டேவிட் அபெல் தொணவன் (சுரேஷ் கோபி). ஆதாரங்களும், சேகரிப்பட்ட தடையங்களும் ஜானகிக்கு எதிராகவே உள்ளன. இந்நிலையில் ஜானகியின் தந்தையும் மரணம், ஜானகியும் கர்ப்பமடைகிறார். மன அழுத்தம், கைகொடுக்காத சாட்சிகள், மீடியா செய்திகள் என ஜானகியின் நற்பெயருக்கும் கலங்கம் வருகிறது. தீர்ப்பும் சாதகமாக இல்லாமல் போகவே மீண்டும் தனது வேலைக்குத் திரும்பி எந்த நியாயமும், தர்மமும் வேண்டாம் என வாழத் துவங்குகிறார் ஜானகி. ஆனால் உண்மை எத்தனை நாட்களுக்கு மறைந்திருக்கும். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஜானகிக்கு உண்மையில் என்ன நடந்தது, யார் குற்றவாளி, விசாரணை என்னவானது என்பது மீதிக் கதை. ஒவ்வொரு நொடியும் உலகின் எதோ ஒரு மூலையில் யாரோ ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கும் அல்லது பலாத்காரத்திற்கும் ஆளாகிறார். ஆனாலும் அதற்கான நியாயம் சரியாகக் கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறியே.

‘‘சட்டத்தில் உண்மை ஜெயிக்காது, நன்கு கவனித்தால் வைக்கப்படும் ஆதாரங்கள்தான் ஜெயிக்கும். ஆதாரங்களே சட்டத்துக்கு முன்பான உண்மை. அதை சரியாக ஒப்படைக்கும் பட்சத்தில் அதன் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. எனவே யாருக்கு என்ன குற்றம் நேர்ந்தாலும் நீங்கள் எவ்வளவு இக்கட்டான சூழலில் இருப்பினும் சாட்சிகள், ஆதாரங்கள் அவசியம். அவை கைகொடுக்காத நிலையில் சட்டத்தின் கதவுகள் சாத்தப்படும்’’ என சுரேஷ் கோபி ஓரிடத்தில் சொல்வார். ஆம் நமக்கான நீதி கிடைக்க ஆதாரமும், சாட்சிகளும் அவசியம். அது பொய்த்துப்போன நிலையில் தான் இங்கே ஜானகியும் தடுமாறுகிறார். மேலும் விசாரிக்கும் காவல் துறையினரும் குற்றம் நடந்த இடத்தில் விடப்படும் ஒரு குண்டூசி மீது கூட சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டும் என்னும் எச்சரிக்கையையும் கொடுக்கிறது இப்படம். அதேபோல் இப்படியான பாதிக்கப்பட்ட பெண்கள் சுமக்கும் குழந்தையின் சுமையையும் சேர்த்து ஏன் பெண்கள் சுமக்க வேண்டும் என்கிற வித்யாசமான பார்வையையும் எடுத்து வைத்து கேள்வி கேட்டிருக்கிறது ‘‘ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா’’.

- மகளிர் மலர் குழு.