Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜம்மு-காஷ்மீரில் வெள்ளப் பெருக்கு; மேகவெடிப்பு பலி 46 ஆக உயர்வு; 300 பேர் மாயம்: ஒட்டுமொத்த கிராமமே அடித்து சென்றதால் சோகம்

டேராடூன்: உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 46 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உத்தரகண்ட் மாநிலம், இமாச்சலப் பிரதேசம் ஆ்கிய மாநிலங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு பேரழிவுகளைத் தொடர்ந்து, தற்போது ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சோசிட்டி கிராமத்தில் மேகம் வெடித்து பெரும் துயரம் நிகழ்ந்துள்ளது.

இந்த கோர சம்பவத்தில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் இருவர் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆவர். மேலும், 160 பேர் காயமடைந்துள்ள நிலையில், 300க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. மாநில முதல்வர் உமர் அப்துல்லா, இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நிலைமையை விளக்கியுள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஒவ்வொரு உயிரையும் மீட்க மீட்புப் படையினர் பல மணி நேரமாகப் போராடி வருகின்றனர். ஆனால், தொடர் மழையும், சேறும் மீட்புப் பணிகளுக்குப் பெரும் தடையாக உள்ளன. மேக வெடிப்பால் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும், சகதி மற்றும் இடிபாடுகளும் கிராமத்தையே சிதைத்துள்ளன. விபத்து நடந்த பகுதிகளில் ரத்தக் கறையுடன் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகின்றன. ராணுவம், காவல்துறை மற்றும் உள்ளூர் மக்கள் காயமடைந்தவர்களைத் தோளில் சுமந்து, சேறு நிறைந்த பாதைகள் வழியே மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு, தங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. இதுகுறித்து பேசிய ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சுனில் சர்மா, ‘மச்சைல் யாத்திரையின் அடிவார முகாமான சோசிட்டியில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் அழிவும், மரண ஓலமுமாக இருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்’ என்று வேதனையுடன் தெரிவித்தார். இந்தக் கிராமம், புகழ்பெற்ற மச்சைல் மாதா யாத்திரையின் அடிவார முகாமாகும். வியாழக்கிழமை மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்தத் துயரம் நிகழ்ந்தபோது, அங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடுகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. பாதுகாப்பு முகாம் மற்றும் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

காயத்துடன் மீட்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், ‘நான் உயிருடன் பிழைப்பேன் என்று நினைக்கவே இல்லை. என்னைக் காப்பாற்றிய ராணுவத்திற்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள்’ என்று கண்ணீருடன் கூறினார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காரின் அடியில் சிக்கிய மற்றொருவர், ராணுவத்தினரின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தங்களது அன்புக்குரியவர்களைக் காணாமல் தவிக்கும் மக்களின் கதறல்களால், அந்தப் பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.