Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆப் ஜெய்சா கொய்!

ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான காட்சிகளின் வழியாக பெண் சுதந்திரம் என்றால் என்ன ஆண் - பெண் சமநிலை என்றால் என்ன குறிப்பாக ஆண் - பெண் உறவில், திருமணத்தில் காதலுக்கு, அன்புக்கு என்ன இடம் என எடுத்து வைத்திருக்கிறது “ஆப் ஜெய்சா கொய்” . ஸ்ரீ ரேணு திரிபாதி (மாதவன்), 42 வயது வரை திருமணம் ஆகாமல் மற்றவர்கள் கேள்விக்கும், கேலிக்கும் ஆளாகி இருக்கும் பேச்சிலர். ஒரு பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராகப்பணி செய்கிறார். பெண் வாசனையே இல்லாமல் வாழும் ஸ்ரீ ரேணுவுக்கு நண்பன் கொடுக்கும் ஆலோசனை ஒரு இணைய செயலியில் ஊர் , பேர் தெரியாத பெண்ணிடம் நட்பாகி வாய்ஸ் சாட் செய்யலாம் என்பது தான். ஸ்ரீ யும் ஒரு பெண்ணின் அன்பான குரலால் ஈர்க்கப்பட்டு பேசத் துவங்குகிறார். இதற்கிடையில் அண்ணி குசும்(ஆயிஷா ரசா) மூலமாக ஒரு வரன் வருகிறது. பிரெஞ்சு ஆசிரியராக தனது 32 வயதில் இருக்கும் மது போஸ் ( பாத்திமா சனா ஷாய்க்) ஸ்ரீ ரேணுவுக்கு ஓகே சொல்கிறார். இருவரும் சந்தித்துப் பேசி பழகுகிறார்கள். நட்பு காதலாகிறது. காதல், குடும்பத்தார் சம்மதத்துடன் நிச்சயத்தில் முடிகிறது. நிச்சயம் முடிந்த மகிழ்ச்சியில் வாய்ஸ் சாட் குரல், அதே தொனியில் ரேணுவை மது ‘‘ஸ்ரீ ...” என அழைக்க தன்னிடம் மொபைல் செயலியில் பேசியது மதுதான் என கண்டறிந்து உடைந்து விடுகிறார் ஸ்ரீ ரேணு. பெண் என்றால் சமையலறை, வீட்டு வேலை , குடும்பம் மட்டுமே அவளது கடமை என கட்டளையிடும் ஆணாதிக்க மனநிலை கொண்ட பின்னணியில் இருந்து வந்த ரேணுவால் மது ஒரு வாய்ஸ் டேட்டிங் செயலியில் இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அவ்வளவுதான் ‘‘அதெப்படி ஒரு நல்ல குடும்பத்துப் பெண் அப்படிப்பட்ட செயலியில் இருப்பார்?” என்கிற ரேணுவின் கேள்வி மதுவை உடைக்கிறது. ‘‘நீயும் அங்கே இருந்தாயே” என ரேணுவை மது கேள்வி கேட்க, செட்டாகாது என திருமணம் ரத்தாகிறது.

ரேணுவின் அண்ணியாக வரும் குசும். காலம் காலமாக கணவனின் கட்டுப்பாட்டுக்குள் கிட்டத்தட்ட அவருக்கு பணிவிடை செய்யும் வீட்டு வேலை செய்யும் பணியாளர் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திருமணநாள் என ஆசையாக அருகில் வந்தால் கூட இந்த வயதில் இதெல்லாம் தேவையா. எனக்கு மல்லிகை பூ மணம் என்றாலே அலர்ஜி என விரட்டுகிறார் கணவர். வீட்டு வேலை மற்றும் தனக்கென ஒரு சிறிய தொழில் தொடங்கி ஊறுகாய் செய்வது இனிப்புகள் செய்து கொடுப்பது என வருமானமும் செய்து வருகிறார் குசும். மகள் அடுத்த படிப்பு , வேலை என பேசினாலே சமையல் நிகழ்ச்சிகள் பார் வீட்டு வேலைகளை கற்றுக்கொள் அல்லது போகிற இடத்தில் நீ திட்டு வாங்குவாய் என சொல்லும் தந்தையாக மனைவியை மதிக்காத கணவனாக ஸ்ரீ ரேணுவின் அண்ணன் வாழ்கிறார். எனில் ஸ்ரீ ரேணு மட்டும் விதிவிலக்காக இருப்பாரா என்ன? இதற்குள் பின்னிப்பிணைந்த கதையாக செல்கிறது. இந்த உலகம் அத்தனை பேருக்கும் உரியது உனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை மற்ற உயிர்களுக்கும் உண்டு என்கிற கருத்தை மிக அழகாக எடுத்து வைத்திருக்கிறது இந்த திரைப்படம். ஆண் என்கிற ஸ்பீசிச (specism) அதிகாரத்தில் உழன்று ஊறி வாழ்ந்து கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் மாதவன். தவறை நினைத்து வருந்தி திரிந்து மன்னிப்பு கேட்க வருகிறார் என நினைத்தால் அப்படியே தலைகீழ்.

“உன்னை நான் மன்னித்து விட்டேன், உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய். ஆனால் ஒரு சில எல்லைக்குள் செய்” என மாதவன் சொல்லும் இடத்தில் பாத்திமா சனா மிக அமைதியாக ” எனக்கு அனுமதியும் , எல்லையும் வகுக்க நீ யார் ?, நீ இன்னும் திருந்தவே இல்லை\” என கேட்கும் இடத்தில் நம்மையும் மீறி கைதட்டத் தோன்றும்.இதற்கிடையில் மகளின் வேலைக்காக உடன் வரும் குசும் கதாபாத்திரத்தில் அண்ணியாக வரும் ஆயிஷா ரசா மணப்பெண்ணாக வரும் பாத்திமாவின் மாமா மீது காதல் வயப்படுகிறார். கணவனின் மீதான வெறுப்பு, ஆணாதிக்க கட்டுப்பாடு , அடிமைத்தனம் என அத்தனையையும் உடைத்து அவருக்கு காதல் வருகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடையும் அண்ணன் கதாபாத்திரமும் ரேணுவை போலவே “என்னிடம் நீ மன்னிப்பு கேள் அத்தனையும் மறந்து நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன் நான் உன்னை மன்னித்துவிடுகிறேன்” என்கிறார். அங்கு ரேணு உட்பட மொத்த குடும்பத்தின் ஆதிக்க மனநிலையும் உடைபடுகிறது. “எங்க அம்மாவுக்கு காதல் வந்திருக்கு அதில் என்ன தப்பு” என மகள் கதாபாத்திரம் அம்மாவுக்கான குரலாக ஒலிக்கிறது. “நீங்க என்ன செய்தாலும் அது சரிதான். உங்கள் மேலே இருக்கும் மதிப்பும் மரியாதையும் எனக்கு குறையாது. நீங்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை” என சொல்லும் இடத்தில் ரேணுவாக நிற்கும் மாதவன் மனதில் இடம் பிடிக்கிறார்.

“இந்த சமூகம் என்னை இப்படித்தான் வளர்த்திருக்கிறது. ஆண் என்னவாக இருக்க வேண்டும். பெண் எப்படி நடத்தப்பட வேண்டும் என வகுப்பெடுத்து என்னை வளைத்திருக்கிறது. நான் மட்டும் எப்படி இதில் விதிவிலக்காக இருப்பேன். மாறிடுவேன் மாற கத்துக்கறேன். எனக்கு ஒரு வாய்ப்புக் கொடு” என மாதவன் கேட்கும் இடத்தில் இயக்குனர் விவேக் சோனி நம் மனங்களில் சிம்மாசனம் அமைத்து அமர்கிறார். “காதல் என்பது காதல் மட்டுமே. காதலுக்கு காதலைத்தான் கொடுக்க முடியும். அதில் ஆண் - பெண் என்கிற கட்டுப்பாடுகள் தேவையில்லை என சமூகத்துக்கு தேவையான சமநிலை வகுப்பு எடுக்கிறது சமீபத்தில் ஓடிடியில் வெளியாகியிருக்கும் ஆப் ஜெய்சா கொய்” திரைப்படம்.

- மகளிர் மலர் குழு.