டெல்லி : விவசாயிகள் நலன்களுக்காக அச்சமின்றி குரல் கொடுத்தவர் ஜெகதீப் தன்கர் என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், "ஜெகதீப் தன்கர் பதவி விலகலுக்கு ஆழமான காரணங்கள் உள்ளது. திங்களன்று பகல் 1 மணி - மாலை 4 மணிக்குள் பெரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பதவி விலக தன்கர் கூறிய உடல்நல காரணத்தை விட வேறு காரணங்கள் உள்ளன. துணை ஜனாதிபதி பதவியில் அமர்த்தியவர்களைப் பற்றி தவறான கருத்தை ஏற்படுத்துவதாக தன்கர் தெரிவித்துள்ளார். திங்களன்று காலை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஜெ.பி.நட்டா, கிரண் ரிஜிஜூ கலந்துகொண்டனர். மாலை 4 மணிக்கு நடந்த கூட்டத்துக்கு அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, கிரண் ரிஜிஜூ வரவில்லை. தன்கர் கூட்டிய கூட்டத்துக்கு அமைச்சர்கள் வர மாட்டார்கள் என்பது அவருக்கு தெரியப்படுத்தப்படவில்லை. நீதிபதிகளின் பொறுப்பு பற்றி வலியுறுத்திய தன்கர், பொதுவாழ்வில் அகங்காரம் கூடாது என கூறியுள்ளார்.
விவசாயிகள் நலன்களுக்காக அச்சமின்றி குரல் கொடுத்தவர் தன்கர். நடைமுறைகள், ஒழுங்குகள் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியவர் தன்கர். துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் தன்கர் உயர்ந்து நிற்கிறார். தன்கரை துணை ஜனாதிபதி பதவிக்கு உயர்த்தியவர்களின் மதிப்பு குறைந்துவிட்டது. தன்கர் ராஜினாமாவை திரும்ப பெற வலியுறுத்துமாறு பிரதமரிடம் காங். தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். தன்கர் ராஜினாமாவை திரும்ப பெற்றால் உழவர் சமுதாயம் மகிழ்ச்சியடையும்"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.