ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 நோயாளிகள் உயிரிழப்பு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 நோயாளிகள் உயிரிழந்தனர். ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் ஐ.சி.யுவில் 11 பேர் இருந்தனர் எனவும் கூறப்படுகிறது. மேலும் சில நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்து காரணமாக பல்வேறு ஆவணங்கள், ஐசியு உபகரணங்கள், இரத்த மாதிரி குழாய்கள் மற்றும் அப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பிற பொருட்கள் தீயில் கருகின. தீயணைப்பு படையினர் வந்தபோது, மருத்துவமனையின் முழு வார்டும் தீப்பிழம்புகள் மற்றும் புகையால் சூழப்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
உயிரிழந்தவர்கள் பிந்து (சிகார்), திலீப் (ஜெய்ப்பூர்), ஸ்ரீநாத், ருக்மிணி, குர்மா (அனைவரும் பரத்பூரைச் சேர்ந்தவர்கள்) மற்றும் பகதூர் (ஜெய்ப்பூர்) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை மற்றும் தடயவியல் குழு தீ விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன.