Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறை சென்றால் பிரதமர், முதல்வர் பதவி பறிப்பு மசோதா; மோடியின் மீது முதலில் நடவடிக்கை எடுங்கள்: சிவசேனா (உத்தவ்) கட்சி கடும் விமர்சனம்

மும்பை: சிறை சென்றால் பிரதமர், முதல்வர் பதவி பறிப்பு மசோதா கொண்டு வருவதற்கு முன்பு முதலில் மோடியின் மீது நடவடிக்கை எடுங்கள் என்று சிவசேனா (உத்தவ்) கட்சி பத்திரிகையில் கடும் விமர்சனம் வந்துள்ளது. ஊழல் அல்லது கடுமையான குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் காவலில் வைக்கப்படும் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களைப் பதவியில் இருந்து நீக்க வழிவகை செய்யும் புதிய அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தச் சூழலில், சிவசேனா (உத்தவ்) கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில், ‘அமித் ஷாவின் வெற்று தார்மீக உபதேசம்... முதலில் பிரதமரின் ராஜினாமாவைப் பெறுங்கள்’ என்ற தலைப்பில் காட்டமான தலையங்கத்தை வெளியிட்டுள்ளது. அதில், அரசியலில் ஊழல் மற்றும் ஒழுக்கக்கேட்டின் சேற்றில் நின்றுகொண்டு, நாட்டின் அரசியலைத் தூய்மைப்படுத்தப் புறப்பட்டிருப்பதாக பாஜகவை அந்த கட்டுரையில் குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக குஜராத் உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தபோது, சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதை நினைவூட்டியுள்ள அந்தக் கட்டுரை, அமித் ஷா தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்யவில்லை என்றும், வலுவான ஆதாரங்கள் இருந்ததாலேயே பதவி விலக நேரிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அந்த காலகட்டத்தில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் சட்டத்திற்குப் புறம்பாக உதவியதால்தான், அவரால் வெளிப்படையாக நடமாட முடிந்தது என்றும், எனவே அமித் ஷா தார்மீகம் பற்றிப் பேச வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடி நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களை கவுதம் அதானிக்கு இலவசமாகத் தாரை வார்த்துள்ளார் என்றும், இதுவே அவருக்கு எதிரான தேசியக் குற்றம் என்றும் அந்தக் கட்டுரை குற்றம் சாட்டியுள்ளது.

இந்த தேசியக் குற்றத்திற்காக உள்துறை அமைச்சர், பிரதமர் மோடி மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் இந்த புதிய மசோதாவிற்கு அர்த்தம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை வசூலித்தார்கள். ஊழல்வாதிகள், கொலைகாரர்கள், கற்பழிப்பாளர்கள் என அனைவரையும் பாஜகவில் இணைத்துக்கொண்டு தார்மீகம் குறித்து பேசுகிறார்கள் என்றும் அந்த கட்டுரையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் அமித் ஷாவின் தார்மீக மசோதா மக்களவையில் கிழித்து எறியப்பட்டது ஒரு தொடக்கம்தான் எனவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.