கால் நூற்றாண்டு காலம் சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு நீண்ட விடுப்பு வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை
சென்னை: உயர்நீதிமன்றத்தின் கருத்தின் அடிப்படையில் நீண்ட கால வாழ்நாள் சிறைவாசிகளைத் தமிழ்நாடு அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சுமார் கால் நூற்றாண்டுக் காலம் வாழ்நாள் சிறை அனுபவித்த 21 முஸ்லிம்கள் தங்களுக்கு பரோல் எனும் நீண்ட விடுப்பு வழங்க வேண்டுமென்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய இரு நீதியரசர்கள் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு நீண்ட நாள் விடுப்பு குறித்த முடிவைத் தமிழ்நாடு அரசு தான் எடுக்க வேண்டும் என்றும் கருணையுடன் செயல்படும் மாநில அரசு இவர்களை முன் விடுதலை செய்யவும் பரிசீலிக்க வேண்டுமெனத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த 21 சிறைவாசிகளுக்கும் உடனடியாக நீண்ட விடுப்பு வழங்குவதற்கும் இவர்களை முன் விடுதலை செய்யவும் முதலமைச்சர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.


