ஜெகதீப் தன்கர் ராஜினாமாவுக்கு முன் பாஜக எம்பிக்களிடம் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கப்பட்டதா?: நேற்று மாலை முதல் இரவு வரை நடந்த பரபரப்பு தகவல்கள்
புதுடெல்லி: ஜெகதீப் தன்கர் ராஜினாமாவுக்கு முன் பாஜக எம்பிக்களிடம் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், நேற்று மாலை முதல் இரவு வரை நடந்த பரபரப்பு தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளன. சர்ச்சையில் சிக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் குறித்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நோட்டீசை நேற்று மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டார். கிட்டத்தட்ட அதே நேரத்தில் (மதியம் 2 மணி), ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட எம்பிக்கள் மக்களவையில் நீதிபதி வர்மாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மான நோட்டீசில் கையெழுத்திட்ட செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து, மாலை 4.07 மணியளவில், நீதிபதி பதவி நீக்கத் தீர்மானம் குறித்து 63 எதிர்க்கட்சி எம்பிக்களிடமிருந்து நோட்டீஸ் பெறப்பட்டதாக மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விரிவாகத் தெரிவித்தார். ஒரு உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக இரு அவைகளிலும் பதவி நீக்கத் தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்படும்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை அவர் நினைவூட்டினார். மேலும், ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலிடம் மக்களவையில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்தும்படியும் கேட்டுக்கொண்டார். இவ்விசயத்தில் கூட்டுக் குழு அமைப்பது பற்றியும், விதிகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆனால், தனது கடைசி உரையில்கூட, தனது உடல்நிலை குறித்தோ அல்லது ராஜினாமா செய்யும் எண்ணம் குறித்தோ அவர் எந்த தகவலும் அளிக்கவில்லை.
மாநிலங்களவையின் கடந்த சில அமர்வுகள் ஜெகதீப் தன்கருக்கு மிகவும் கடினமானதாகவே இருந்தன. அவர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பினரின் அதிருப்தியையும் சம்பாதித்தார். குறிப்பாக, ஜெகதீப் தன்கர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாகக் குற்றம் சாட்டினர். மேலும், அவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் அவர்கள் கொண்டு வந்தனர். ஆனால், அந்தத் தீர்மானத்தை துணைத் தலைவர் நிராகரித்தார். இத்தகைய சூழலில்தான், நீதிபதி பதவி நீக்கத் தீர்மானம் மாநிலங்களவையில் முதலில் கொண்டுவரப்படும் என எதிர்க்கட்சிகள் நம்பிக்கையுடன் இருந்தன. ஏனெனில், நெறிமுறைப்படி மாநிலங்களவைத் தலைவர் என்பவர், மக்களவைத் தலைவரை விட உயர் பதவியில் இருப்பவர் ஆவார்.
நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பிரமோத் திவாரி மற்றும் அகிலேஷ் பிரசாத் சிங் ஆகியோர் ஜெகதீப் தன்கரைச் சந்தித்தனர். அப்போது எல்லாம் இயல்பாகவே காணப்பட்டதாக ஜெய்ராம் ரமேஷ் கூறினார். நேற்று காலை 10 மணிக்கு அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று ஜெகதீப் தன்கர் அவர்களிடம் தெரிவித்திருக்கிறார். மாலை 6 மணியளவில் கடைசியாக அவரைச் சந்தித்துவிட்டு வெளியேறிய காங்கிரஸ் எம்.பி அகிலேஷ் பிரசாத் சிங், ஜெகதீப் தன்கரின் உடல்நிலை நன்றாக இருந்ததாகவும், ராஜினாமா செய்யும் எந்த அறிகுறியும் அவரிடம் தெரியவில்லை என்றும் கூறினார். மாறாக, ஒரு குழுவில் தன்னைச் சேர்ப்பது குறித்து ஜெகதீப் தன்கர் தன்னிடம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார். நேற்றிரவு 7.30 மணிக்கு ஜெய்ராம் ரமேஷ், ஜெகதீப் தன்கரை தொலைபேசியில் அழைத்தபோது, அவர் குடும்பத்தினருடன் இருப்பதாகவும், மறுநாள் பேசுவதாகவும் கூறியுள்ளார்.
இத்தனை நிகழ்வுகளுக்கு மத்தியில், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அலுவலகத்தில் பாஜக எம்பிக்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. சில எம்பிக்களிடம் இருந்து வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கப்பட்டதாக பாஜக எம்பி ஒருவர் பெயர் கூற விரும்பாமல் தெரிவித்தார். இந்த மர்மமான சூழலுக்குப் பிறகு, ஜெகதீப் தன்கர் உடல்நிலையைக் காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திடீர் முடிவு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பெரும் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவால் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க, ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் உடல் நலக்குறைவால் ஜெகதீப்தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தாரா? அல்லது வேறு அரசியல் காரணங்கள் உள்ளனவா? என்பது எதிர்கட்சி தரப்பு மட்டுமின்றி, ஆளுங்கட்சி தரப்பிலும் பெரும் கேள்வியாக உள்ளது.