Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் குடும்பத்துடன் லண்டன் பயணம்: தனி விமானத்தில் பலவித ஆடம்பரம்

திருமலை: ஆந்திராவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், அம் மாநில முதல்வர் ஜெகன்மோகன் குடும்பத்துடன் லண்டனுக்கு தனி விமானத்தில் சுற்றுலா சென்றுள்ளார். ஆந்திராவில் கடந்த 13ம்தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன், குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுலாவாக தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். இதற்காக நேற்றிரவு தாடேப்பள்ளியில் உள்ள வீட்டில் இருந்து காரில் கன்னவரம் விமான நிலையம் வந்த ஜெகன்மோகன் இரவு 11 மணியளவில் குடும்பத்தினருடன் தனி விமானத்தில் நேரடியாக லண்டனுக்கு புறப்பட்டார். இந்த மாதம் 31ம் தேதி ஆந்திரா திரும்புகிறார்.

முன்னதாக முதல்வரின் பாதுகாப்புக்காக 4 அதிகாரிகள் லண்டன் சென்றனர். ஜெகனின் பாதுகாப்புப் பணியாளர்களின் செலவை அரசே ஏற்க உள்ள நிலையில் இது தனிப்பட்ட பயணம் என்பதால், முதல்வர் குடும்பத்தினர் செய்யும் அனைத்து செலவுகளும் தனிப்பட்ட செலவுகளாக கொண்டுள்ளது. சி.பி.ஐ. வழக்கில் ஜாமீனில் உள்ள முதல்வர் ஜெகன்மோகன் வெளிநாட்டு சுற்றுலா செல்ல சி.பி.ஐ. நீதிமன்றத்தில் 31ம் தேதி வரை சென்று வர கடந்த வாரம் ஜெகன்மோகன் முன் அனுமதி பெற்றார். தேர்தல் கடந்த 13ம் தேதி நிறைவு பெற்று, முடிவுகள் ஜூன் 4ம் தேதி வரவுள்ள நிலையில் அதுவரை லண்டனில் உள்ள தனது மகள்கள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க லண்டன் மற்றும் யு.கே.நாடுகளில் முதல்வர் ஜெகன்மோகன் சுற்றுலா மேற்கொள்கிறார்.

உலகிலேயே மிகப்பெரிய ஆடம்பர விமானம்

முதல்வரின் லண்டன் பயணத்திற்காக உலகிலேயே மிகவும் ஆடம்பரமான விஸ்டா ஜெட் நிறுவனத்தின் பாம்பார்டியர் 7500 ரக விமானம் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு விமானத்தில் படுக்கைகள் தவிர 14 இருக்கைகள் உள்ளது. இந்த விமானத்திற்கு 1 மணி நேரத்திற்கு ₹12 லட்சம் வாடகையாகும்.