Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பலாப்பழக்காரர் இந்த முறை வெற்றி பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘புகார் மேல புகார் வந்தாலும் சர்வசாதாரணமாக கரன்சி குவிப்பில் ஈடுபட்டு வருகிறாராமே சர்வேயர்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘கோவை சூலூர் தாலுகா அலுவலகத்தில் இருகூர், நாச்சிபாளையம், கன்னம்பாளையம் அரசூர், கருமத்தம்பட்டி, சூலூர் ஆகிய பகுதிகளை கவனித்து வரும் சர்வேயர் ஒருவர் மீது தொடர் புகார் எழுந்துக்கிட்டு இருக்கு.. பட்டா மாறுதல் உட்பிரிவு செய்தல், நில அளவீடு செய்தல், குத்தகை நிலம் அளவீடு செய்தல் என பல பணிகளில் லட்சக்கணக்கில் கரன்சி குவிக்கிறாராம்.. விண்ணப்பங்களில் ஏதேனும் குறையை கண்டுபிடிச்சி தள்ளுபடி ஆகிவிடும் என பயமுறுத்தி கரன்சி கறந்து விடுகிறாராம்.. ஆன்லைன் பதிவேற்றம் மூலம் ஆவணங்கள் பதிவு செய்தாலும், ஏதேனும் குறை கண்டுபிடித்து, பணம் சுருட்டுவதிலேயே குறியாக இருக்கிறாராம்.. இவர், இங்கேயே தொடர்ந்து 10 வருடத்திற்கு மேல் பணிபுரிந்து வருகிறாராம்.. ஆறு எழுத்து பெயர் கொண்ட இவர், கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது கோவை வடக்கு பகுதியில் பணிபுரிந்தாராம்.. அங்கேயும் இவர் இப்படித்தானாம்.. தொடர்ந்து கரன்சி குவித்து வரும் இவரை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றவேண்டும் என சில நியாயமான ஊழியர்களின் குரல் ஒலிக்கிறது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ராஜ்நிவாசுக்கு ஆதார பைல்களுடன் சிபிஐ விசிட்டை தொடர்ந்து அதிர்ச்சியில் இருக்காமே புல்லட்சாமி தரப்பு..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மலராத கட்சி ஆதரவுடன் தென் மாநில யூனியனில் புல்லட்சாமி ஆட்சி நடந்து வருது.. கூட்டணி தொடர்பாக சமீபத்தில் சஸ்பென்ஸ் முடிவை வெளியிட்டாராம் புல்லட்சாமி.. இதனால் மலராத கட்சியின் டெல்லி பவர்புல் தலைமை ஷாக் ஆயிட்டாம்.. தங்களது திட்டமோ வேறொன்றாக இருக்க, ஆளும் தரப்புக்கு எதிரான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கைப்பாவைகள் ரகசியமாக முடுக்கிவிடப்பட்டதாம்.. இதன் எதிரொலிதான் யூனியன் ராஜ்நிவாசுக்கு ஒன்றிய சிபிஐ அதிகாரிகளின் திடீர் விசிட்டாம்.. நாங்க ரெடியாகிட்டோம்.. சிறப்பு நீதிமன்றத்தை உடனே அமையுங்க... என்ற சமிக்ஞை கொடுத்துட்டு சென்றார்களாம்.. அப்போது நிலுவை வழக்குகள் குறித்த பட்டியலையும் சமர்ப்பித்தார்களாம்.. முக மலர்ச்சியோடு அவர்களை வரவேற்ற மாநில நிர்வாகியோ பச்சைக்கொடி காட்டி விட்டாராம்..

ஏற்கனவே புல்லட்சாமி அரசுக்கு எதிராக அரசு பணிகளுக்கு லஞ்சம், நில அபகரிப்பு மோசடிகள், மக்கள் நலத்திட்ட பணி ஒப்பந்தத்தில் லஞ்சம் என சில புகார்கள் ராஜ்நிவாசில் ஆதாரங்களுடன் இருக்க, ஒவ்வொரு பைலாக அடுத்தடுத்து தூசு தட்டப்படலாம் என்பதால் புல்லட்சாமி தரப்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளதாம்.. இதுபற்றிதான் யூனியன் முழுக்க தற்போதைக்கு பரவலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தல் நெருங்குவதால் தொழிற்சாலை கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்போவதா சீன் போட்ட இலைக்கட்சி எம்எல்ஏவுக்கு தொகுதி மக்கள் கிடுக்கிப்பிடி போட்டுட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மஞ்சள் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் கொண்ட தொகுதியின் இலைக்கட்சி எம்எல்ஏ தேர்தல் நெருங்கி வருவதால் மீண்டும் சீட்டு வாங்கி ஜெயிச்சுவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு தொகுதியில் ரவுண்டு வருகிறாராம்.. இவரது தொகுதியில் தொழிற்சாலைகள் கழிவுநீர் பிரச்னை பல வருஷமா இருக்கு.. ஆனா இதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கலை.. அதோடு இல்லாமல் மஞ்சள் மாவட்டத்தை சேர்ந்த சோப்பு நுரை புகழ் மாஜி மாசு துறையை கையில் வைத்திருந்தும் கடந்த காலங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.. இந்த சூழலில் எலக்சன் வர்றதால கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண போகிறேன்னு தொகுதியோட இலைக்கட்சி எம்எல்ஏ கிராம மக்களை ஒன்று திரட்ட ஆயத்தமாகி வருகிறாராம்.. இதுக்காக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு விசிட் அடித்து மக்கள் கிட்ட போராட்டம் செய்யலாம் வாங்கன்னு சொன்னாராம்.. ஆளுங்கட்சியா 10 வருஷம் எதுவும் செய்யலை.. இப்ப எலக்சன் வர்றதால போராட்டம், ஆர்ப்பாட்டம்னு கூப்பிட்டா நாங்க எப்படி வருவோம்னு கேள்வி மேல கேள்வி கேட்டு புறக்கணிச்சிட்டாங்களாம்.. அதன் பிறகு வேற வழி தெரியாம கட்சி தொண்டர்களை மட்டும் அழைச்சிட்டு போய் கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்னு கலெக்டர் ஆபீஸில் மனு கொடுத்திட்டு வந்தாராம் ஜெயமான அந்த எம்எல்ஏ..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சியில் இருந்து நீக்கியவர்களை சேர்க்க முடியாது என கறார் காட்டும் சேலத்துக்காரர் ஹனிபீ மாவட்ட நிர்வாகிகளை மட்டும் கவனிப்பதாக சொல்றாங்களே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்பதில் ரொம்பவே கறாராக இருக்கிறார்.. இதற்காக, பலாப்பழக்காரர் இந்த முறை ஹனிபீ மாவட்டத்தில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக, அந்த மாவட்டத்து இலைக்கட்சி நிர்வாகிகளை அவ்வப்போது அழைத்து ஆலோசனையும், லேசாக கவனிப்பும் செய்து வருகிறாராம்... மேலும், ஹனிபீ மாவட்ட இலைக்கட்சி முக்கிய நிர்வாகிகளை, சேலத்துக்காரர் சந்திக்கும் போதெல்லாம், நாம் மெகா கூட்டணி வைத்து போட்டியிடுவோம், அப்போது பலாப்பழக்காரர் காணாமல் போய்விடுவார். எனவே, அவருக்கு எதிராக தேர்தல் வேலையை பார்க்குமாறு கூறி வருகிறாராம்.. ஆனால், சேலத்துக்காரர் சொல்ற மாதிரி எதுவும் நடக்கவில்லையாம்... அவர் சொல்ற மாதிரி நாம இருந்தால் எதிர்காலத்தில் நமக்கும் அரசியல் வாய்ப்பு இல்லாமல் போய்விடுவோமோ என்ற அச்சம், ஹனிபீ மாவட்ட இலைக்கட்சி நிர்வாகிகளிடம் வந்துவிட்டதாம்.. சிலர் இன்னமும் பலாப்பழக்காரரிடம் மறைமுகமாக தொடர்பில் உள்ளதாக மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்படுது.. இதனால் மாவட்டத்தில இருக்கிற ஒவ்வொரு நிர்வாகிகளும், என் வழி தனி வழி என்பதைப் போல தனித்தனியா அரசியல் பண்ணிட்டு இருக்காங்களாம்.. நேரில் சந்தித்தால் கூட மரியாதைக்காக கூட வணக்கம் சொல்வதில்லையாம்.. அந்தளவுக்கு பூசல் அதிகரித்துவிட்டதாம்.. இதே நிலைமை நீடித்தால் ஹனிபீ மாவட்டத்தில இலைக்கட்சி மேலும் வீழ்ச்சியை சந்திக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.