இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 525 கலைஞர்களுக்கு 85 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ், 525 கலைஞர்களுக்கு 85 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா 1 இலட்சம் ரூபாய் நிதியுதவி,
தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க 5 நூலாசிரியர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாடகக் கலைஞர்களுக்கு தலா 1.50 இலட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாட்டிய நாடகங்களை தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாட்டியக் கலைஞர்களுக்கு தலா 1.50 இலட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் 500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, என மொத்தம் 85 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவிகளை 525 கலைஞர்களுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு அரசால் 1955-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கமானது, இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தமிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கலை பண்பாட்டுத் துறையின் ஓர் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் தொன்மையான கலைகளை வளர்த்தல், அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணமாக்குதல், நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழகப் பாரம்பரிய கிராமியக் கலைகளை வெளி மாநிலங்களிலும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல், தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பு அளிக்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், நலிந்த நிலையிலுள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழி வழங்குதல்
அந்த வகையில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் டி.ஜி.ரத்தினம், கே.எஸ்.கிருஷ்ணப்பா, கே.ஏ.சத்தியபாலன், எஸ்.முத்துக்குமார், எஸ்.சுப்ரமணியன், ஏ.முத்துலெட்சுமணராவ், ஏ.பி.அய்யாவு, ஏ.ராஜகிளி, ஆர்.கே.விசித்ரா, எம்.திருச்செல்வம் ஆகிய 10 கலைஞர்களுக்கு பொற்கிழித் தொகையாக தலா 1 இலட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 4 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.
தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க 5 நூலாசிரியர்களுக்கு நிதியுதவி வழங்குதல்
தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க முனைவர் மோ.பாட்டழகன், முனைவர் கி.அய்யப்பன், முனைவர் ஜே.ஆர்.லட்சுமி, முனைவர் க.வெங்கடேசன், முனைவர் சித்ரா கோபிநாத் ஆகிய 5 நூலாசிரியர்களுக்கு நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 2 நூலாசிரியர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
தமிழில் புதிய நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய நிதியுதவி வழங்குதல்
தமிழில் புதிய நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்திட 5 நாடகக் கலைஞர்களுக்கும், 5 நாட்டியக் கலைஞர்களுக்கும் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக
4 கலைஞர்களுக்கு தலா 1.50 இலட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கு நிதியுதவி வழங்குதல்.
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கு 500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 5 கலைஞர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ் மொத்தம் 85 இலட்சம் ரூபாய்க்கான நிதியுதவியினை 525 கலைஞர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் எஸ்.வளர்மதி, இ.ஆ.ப., தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
