கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு சுகுணா புட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சுகுணா சிக்கன் மிக பிரபலமானது. இந்த நிறுவனத்தை சுந்தராஜன் மற்றும் சௌந்திரராஜன் சகோதரர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் உட்பட முக்கிய அலுவலகங்கள் கோவையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகுணா குரூப் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். 9 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இதே போல திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள சுகுணா புட்ஸ் அலுவலகத்தின் நிர்வாக அலுவலகத்தில் வருமானவரித்துறை கமிஷனர் பெர்னாண்டா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். முறையாக வருமான வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோழிப்பண்ணை அதிபர் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு: அதேபோல, நாமக்கல்-மோகனூர் ரோட்டில் வசித்து வருபவர் வாங்கிலி சுப்பிரமணியம். கோழிப்பண்ணை அதிபரான இவர், தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவராக இருந்து வருகிறார். நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் கோழிப்பண்ணைகள் வைத்துள்ளார்.
இவருக்கு சொந்தமான அலுவலகம், நாமக்கல்-திருச்சி மெயின்ரோட்டில் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 10 மணிக்கு சென்னை, கோயம்புத்தூரில் இருந்து பல்வேறு கார்களில் ஒரே நேரத்தில் வந்து குவிந்த வருமான வரித்துறை அதிகாரிகள், மோகனூர் ரோட்டில் உள்ள வாங்கிலி சுப்பிரமணியத்தின் வீடு, அலுவலகங்கள் மற்றும் வீட்டின் அருகில் உள்ள நிதி நிறுவனங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள ஆவணங்கள், கம்ப்யூட்டர்களில் கிடைத்த விபரங்கள் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது, வெளியாட்கள் யாரும் அலுவலகம் மற்றும் வீட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை. இரவு 7 மணியை தாண்டியும் இந்த சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி சோதனை, நகரில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.