Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

600 புதிய ஐ.டி வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்காவுக்கு முதல்வர் அடிக்கல்

சென்னை: திருவண்ணாமலையில் 600 ஐடி.வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்காவிற்கான அடிக்கல்லை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டினார். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புத்தொழில்களை ஆதரிக்கவும், டைடல் நியோ லிமிடெட் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தின் மூலம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி கட்டுமான பரப்பளவுடன் மினி டைடல் பூங்காக்களை அமைக்க அரசு முடிவெடுத்தது. அதன்படி, விழுப்புரம், திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

அவற்றில் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடியில் மினி டைடல் பூங்கா முதல்வரால் திறந்து வைக்கப்பட்டன. திருப்பூர், வேலூர் மற்றும் காரைக்குடி மினி டைடல் பூங்காக்களின் கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவை விரைவில் செயல்பட துவங்கும். மேலும், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வடிவமைப்பு பணிகள் முடிவுற்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் ரூ.37 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல்லை நேற்று நாட்டினார்.

இந்த மினி டைடல் பூங்காக்கள் மூலம் அப்பகுதிகளில் வசித்துவரும் பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்கள் வசித்துவரும் மாவட்டங்களிலேயே தங்கி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுவதுடன், அப்பகுதிகள் சமூக-பொருளாதார வளர்ச்சியடையவும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்படவும் வழிவகுக்கும். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலாளர் முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய், டிட்கோ மற்றும் டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.