Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடும்ப பிரச்னையில் தீர்வு கேட்ட ஐடி ஊழியர் தம்பதியிடம் 85 சவரன் நகைகளை சுருட்டிய இன்ஸ்பெக்டர்: அடகு வைத்து ரூ.42 லட்சம் வாங்கியதால் அதிரடி சஸ்பெண்ட்

திருமங்கலம்: மனைவியிடம் வரதட்சணையாக பெற்ற 95 பவுன் நகையை அவரிடம் கொடுக்கும்படி கணவன் கொடுத்ததை ரூ.42 லட்சத்துக்கு அடமானம் வைத்த புகாரின்பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபினயா. திருமணமாகி சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுதொடர்பாக அபினயா அளித்த புகாரின்பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து பணியிட மாறுதலாகி, கடந்த பிப்ரவரி மாதம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக கீதா (50) பொறுப்பேற்றார். இவரது கணவர் சரவணன், மதுரை, திருநகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார். இன்ஸ்பெக்டர் கீதாவிடம் தனது பெற்றோர் வரதட்சணையாக அளித்த 95 பவுன் நகைகளை, கணவரிடம் இருந்து பெற்றுத் தரும்படி அபினயா கூறியுள்ளார். இதைதொடர்ந்து ராஜேஷ், 95 பவுன் நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதாவிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், அந்த நகைகளை அபினயாவிடம் கொடுக்காமல், தனது சொந்த தேவைக்காக இன்ஸ்பெக்டர் கீதா வங்கியில் ரூ.42 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார்.

இதற்கிடையே அபினயா தரப்பில், அவரது கணவரிடம் நகைகளை கேட்டுள்ளனர். அப்போது அவர் இன்ஸ்பெக்டரிடம் அனைத்து நகைகளையும் ஒப்படைத்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அபினயா நகைகள் தனக்கு வந்து சேரவில்லை என கூறியுள்ளார். இதுகுறித்து ராஜேஷ் கேட்டபோது இன்ஸ்பெக்டர் கீதா உரிய முறையில் பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் நடந்த சம்பவங்கள் குறித்து ராஜேஷ், மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்திடம் புகார் செய்தார். இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கீதா 10 பவுன் நகைகளை மட்டும் திரும்ப கொடுத்துள்ளார்.

அதன்பிறகு மீதமுள்ள 85 பவுனை தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். இதுபற்றி ராஜேஷ், போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் செய்தார். அதன்படி மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி விசாரணை நடத்தியபோது, இன்ஸ்பெக்டர் கீதா மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி ரம்யா பாரதி கடந்த 23ம் தேதி உத்தரவிட்டார். வழக்கு தொடர்பான நகைகளை இன்ஸ்பெக்டரே அடகு வைத்த சம்பவம் காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.