Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐடி ஊழியர் ஆணவ கொலையில் 800 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: வீடியோ ஆதாரங்களுடன் சிபிசிஐடி பரபரப்பு தகவல்கள்

நெல்லை: தமிழகத்தையே உலுக்கிய ஐடி ஊழியர் ஆணவப் படுகொலை வழக்கில் நெல்லை சிபிசிஐடி போலீசார் 70 சாட்சிகளிடம் விசாரித்து 37 ஆவணங்களுடன் 800 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை நெல்லை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவின்செல்வகணேஷ். சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரும் பாளை. கேடிசி நகரைச் சேர்ந்த சரவணன் - கிருஷ்ணகுமாரி எஸ்ஐ தம்பதியின் மகள் டாக்டர் சுபாஷினியும் காதலித்துள்ளனர். இருவரும் வேறு வேறு சாதியினர் என்பதால் சுபாஷினியின் தம்பி சுர்ஜித் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

கடந்த ஜூலை 27ம் தேதி கவின் செல்வகணேஷ் சுபாஷினியின் கிளினிக்கிற்கு தாத்தாவுடன் வந்தபோது அவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்று சுர்ஜித் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தார். இதுதொடர்பாக சுர்ஜித்தை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர், எஸ்ஐ சரவணனையும் கைது செய்தனர். போலீஸ் தம்பதி இந்த ஆணவப் படுகொலை வழக்கில் சேர்க்கப்பட்டதால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். தேசிய மனித உரிமை ஆணையமும் இந்த வழக்கு தொடர்பாக நெல்லையிலும், தூத்துக்குடி ஆறுமுகமங்கலத்தில் உள்ள கவினின் வீட்டிலும் விசாரணை நடத்தியது.

பெரும் பரபரப்பையும், கவனத்தையும் ஈர்த்த இந்தக் கொலை வழக்கில் சுர்ஜித், எஸ்ஐ சரவணன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இந்தக் கொலை சம்பவத்தை மறைக்க சுர்ஜித்திற்கு உடந்தையாக அவரது உறவினர் ஜெயபால் என்பவர் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜெயபாலையும் கைது செய்த போலீசார் எஸ்ஐ கிருஷ்ணகுமாரியை மட்டும் இதுவரை கைது செய்யவில்லை. இந்த வழக்கில் சம்பவ இடம், சிசிடிவி காட்சிகள், சாட்சிகள் என பல்வேறு தரப்பிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி ஆவணங்களை திரட்டினர். சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை 90 நாட்களில் நெல்லை நீதிமன்றத்தில் இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதன் பேரில் நெல்லை சிபிசிஐடி போலீசார் 88வது நாளில் நெல்லை மாவட்ட தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 800 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இதுவரை 70 சாட்சிகளை விசாரணை மேற்கொண்டு பல்வேறு வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். மேலும் 37 ஆவணங்களை திரட்டியுள்ளனர். மேலும் போலீஸ் காவலில் சுர்ஜித், அவரது தந்தை எஸ்ஐ சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோரிடம் விசாரணை நடத்திய வீடியோ ஆதாரங்கள், தடயங்களின் விவரம் ஆகியவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.