Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐடி, ஈடி, சிபிஐக்கு ரூ.56 கோடி, ஒப்பந்தத்துக்கு ரூ.176 கோடி: ஊழல்வாதிகளின் பிரச்னை தீர்க்க ஒரே வழி ‘பே பிஎம்’

மதுரை தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து, மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பிரசாரம் செய்து பேசியதாவது: இந்தியாவில் ஜனநாயகத்தை படுகொலை செய்து பணநாயகத்தின் மூலம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற பாஜ அரசு மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. மோசமான ஒரு பொருளாதாரத்தை கையாண்டுள்ளது பாஜவின் மோடி அரசு. அரைகுறையாக திட்டமிடல் இல்லாத ஜிஎஸ்டி வரி விதிப்பு.

ஊழலுக்கும், பாஜவுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. இந்த உலகத்திலேயே ஊழலைப் பற்றி பேசுவதற்கு ஒரு கட்சிக்கு தகுதி இல்லை என்றால், அது பாஜ தான். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களால் ஊழல்வாதிகள் என்று வழக்கு போடப்பட்ட 25 நபர்கள் பாஜவின் வாஷிங் மெஷின் என்ற திட்டத்தால் அனைவரும் சுத்தமாகி விட்டார்கள். தேர்தல் பத்திரம் மூலம் லாபமே இல்லாத பல கம்பெனிகள், பல நூறு கோடிகளை பாஜ அரசுக்கு தானமாக கொடுத்துள்ளது.

யாரெல்லாம் ஐ.டி, ஈ.டி, சி.பி.ஐ மூலம் வழக்கு விசாரணையில் மாட்டிக் கொண்டார்களோ, அவர்கள் எல்லாம் பே டிஎம் என்பது போல பே பிஎம் என்கிற திட்டத்தில் தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துகிறார்கள். பேடிஎம் என்ற ஆப் உள்ளதைப்போல பே பிஎம் ஆப் இந்தியாவில் உள்ளது. எப்பவெல்லாம் பிரச்னை வருகிறதோ அப்போதெல்லாம் ஐடி, ஈடி, சிபிஐயில் இருந்து தப்பிக்க ரூ.56 கோடி கட்ட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தத்திற்கு ரூ.176 கோடி கட்ட வேண்டும். இதெல்லாம் உண்மை, உதாரணம்.

தேர்தல் பத்திரத்தில் உள்ள உதாரணத்தை எடுத்துக் காட்டியுள்ளனர். செயற்கைக்கோள் ஒப்பந்தத்திற்கு ரூ.140 கோடி கட்ட வேண்டும். தனியார் நிலக்கரி சுரங்கம் ஒப்பந்தம் எடுக்க ரூ.135 கோடி கட்ட வேண்டும். இது கொடூரமான அரசு, பாசிச அரசு, மனிதநேயமற்ற அரசு, செயல் திறனற்ற அரசு, ஜனநாயக விரோத அரசு. அப்படி பணம் செலுத்தி விட்டால் அவர்கள் மேல் இருந்த வழக்குகள் எல்லாம் ரத்து செய்யப்படும்.

இதன் மூலம் ‘பே பிஎம்’ திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த பாஜ மோடி அரசு இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்கிற ஒரு நாடும், இந்திய சட்டமைப்பும் என்கிற மக்களாட்சி முறையும் நீடிக்காது. இவர்களது ஆட்சி நீடித்தால் எதிர்காலமே இருண்டு போய்விடும். நாட்டைக் காப்பாற்ற, மக்களாட்சியை காப்பாற்ற, இந்தியாவின் இதயத்தை காப்பாற்ற இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றியடைய செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.