Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்வாதிகார நாடுகளுடன் இந்தியா கை கோர்ப்பது வெட்கக்கேடானது: மோடி, புடின், ஜி ஜின்பிங் சந்திப்பு பற்றி அமெரிக்கா விமர்சனம்

நியூயார்க்: ஜனநாயக நாடான இந்தியா சர்வாதிகார நாடுகளான ரஷ்யா, சீனாவுடன் கை கோர்ப்பது வெட்கக்கேடானது என அமெரிக்கா காட்டமாக விமர்சித்துள்ளது. இந்தியா மீது அமெரிக்கா 25 சதவீத பரஸ்பர வரி, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25 சதவீத வரி என 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஜவுளி உள்ளிட்ட சில துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி, சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற இரண்டுநாள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு(எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சீனா சென்றார். இந்த பயணத்தின் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை சந்தித்து பேசிய மோடி, அவ்விரு நாடுகளுடளான நல்லுறவு, இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். புடின், ஜி ஜின்பிங் உடனான மோடியின் சந்திப்பு குறித்து அமெரிக்கா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

இதுகுறித்து வௌ்ளை மாளிகையில் நேற்று செய்தியார்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பொருளாதார ஆலோசகர் பீட்டர் நவோரா கூறுகையில், “உலகின் இரண்டு பெரிய சர்வாதிகார நாடுகளின் தலைவர்களான ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தலைவர் மோடி சந்தித்து பேசியது, அவர்களின் வலையில் விழுவது மிகவும் வெட்கக்கேடானது. இந்த சந்திப்பில் எந்தவொரு அர்த்தமும் இல்லை.

மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, கம்யூனிச நாடான சீனாவுடன் பல ஆண்டுகளாக பனிப்போரிலும், சில சமயம் நேரடியான போரிலும் ஈடுபட்டுள்ளது. ஆனால், மோடி என்ன நினைக்கிறார் என்பது தெரியவில்லை” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பீட்டர் நவ்ரோ “சீனா பாகிஸ்தான் ராணுவத்துக்கு நிதியுதவி செய்து அதன் அணு ஆயுதங்களை உருவாக்க உதவி உள்ளது. அத்துடன், சீனா இந்தியாவை மீண்டும், மீண்டும் ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக, அக்சாய்சின் என்ற இடத்தில் இந்தியா பகுதியை சீனா எடுத்து கொண்டுள்ளது. இப்போது இந்திய பெருங்கடலில் இந்தியாவின் இறையாண்மைக்கு சீனா சவால் விடுகிறது. ஆனால், அதேசமயம் சீனாவும், அதன் தொழில்முனைவோர்களும், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் இந்திய வணிகர்களுடன் ஒப்பந்தம் செய்வது நச்சுத்தன்மை வாய்ந்தது.

இந்தியா விதிக்கும் வரிகளை தவிர்ப்பதற்காகவே இந்தியாவை பெரிய கப்பல் போக்குவரத்து மையமாக சீனா பயன்படுத்தி வருகிறது. உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் பல இந்தியா மூலமாக நடக்கிறது. மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. நான் இந்திய மக்களை நேசிக்கிறேன். இந்த விவகாரத்தில் இந்தியா சர்வாதிகார நாடுகளான ரஷ்யா, சீனாவுடன் இல்லாமல், அமெரிக்கா, ஐரோப்பா, உக்ரைன் நாடுகளுடன் இருக்க வேண்டும். இதை மோடி உணர்ந்து கொள்வார் என நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.